சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது செய்யப்பட்டதை போல் ஜனாதிபதியின் செயலாளரை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பயன்படுத்தி முறையற்ற வகையில் கைதியொருவருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ளதை போன்று ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும் என்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கம்மன்பில உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கைகளில் 323 என்று இலக்கமிடப்பட்ட கறுப்பு பட்டிகளை அணிந்தவாறே கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய கம்மன்பில கூறுகையில்,
அரசாங்கத்தால் 323 கொள்கலன்களில் மோடிகள் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மைகளை வெளிப்படுத்துமாறு கோரியும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரியும் நாங்கள் 323 இலக்கம் கொண்ட கறுப்பு பட்டியை கைகளில் அணிந்தவாறு இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்கின்றோம். இதன் குற்றவாளிகள் எத்தகைய உயர் பதவிகளில் இருந்தாலும் பதவி தராதரம் பாராது தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
இதேவேளை ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு வழங்கப்படாத கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் அதிகாரியொருவரும் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் கைது செய்யப்பட்டுள்ளனர். யார் தவறு செய்துள்ளார்கள் என்பதனை புரிந்துகொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு செயற்பாடு தொடர்பில் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமன்னிப்புக்கு உட்பட வேண்டிய கைதிகளின் பெயர் பட்டியலை அனுப்புமாறு ஜனாதிபதி செயலாளரினால் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை அமைச்சின் செயலாளர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளார். அதன்பின்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர் அந்த கடிதத்தை சகல சிறைச்சாலைகளுக்கு அனுப்பியுள்ளார். அதன்படி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த பட்டியல் மீண்டும் ஜனாதிபதி செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக சகல சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்படும். அப்படியாயின் சிறைக்கைதியொருவரின் பெயரை அந்த பட்டியலுக்குள் இரகசியமாக உள்ளடக்குவதென்றால் நான்கு பேரில் அதில் சம்பந்தப்பட வேண்டும். ஜனாதிபதி செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சிறைச்சாலை பணிப்பாளர் ஆகியோரே அவர்கள். இதில் சிறைச்சாலைகள் பணிப்பாளர் குறிப்பிட்ட பெயரை உள்ளடக்கியிருந்தால் அவரை கைது செய்யப்படலாம். ஆனால் சிறைச்சாலைகள் ஆணையாளரும் இதில் கைது செய்யப்படுகின்றார். அல்லது சிறைச்சாலைகள் ஆணையாளரே பெயரை உள்ளடக்கினார் என்றால் அவர் உள்ளே இருக்க, சிறைச்சாலை பணிப்பாளர் வெளியில் இருக்க வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் சிறையில் இருக்க முடியாது. சிறைச்சாலைகள் ஆணையாளர் இதில் தொடர்புபட்டிருந்தால் அவருக்கும் மேலுள்ள ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் பொறுப்பு கூற வேண்டும். இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளரை கைது செய்வதென்றால் அதேபோன்று ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும்.
இதனை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் என்னை சந்தித்து விளக்கியுள்ளனர். வெசாக் போயாவில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் முறை தொடர்பில் அவர் தெளிவுபடுத்தினர். துஷார உபுல்தெனிய அரசியல்வாதிகளுக்காக கடைக்கு போகாத நேர்மையான அதிகாரியாவார். அவரை நீக்கி தமது ஒருவரை நியமிப்பதற்கான வழியையே அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவரை கட்டாய விடுமுறையில் அனுமதிப்பியுள்ளது. அவர் தொடர்பில் முறையான அடிப்பபடை விசாரணைகளை நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்காது அவரை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவையில் தீர்மானனிக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற தீர்மானமாகும். இதனால் அவர் நீதிமன்றத்தில் அதனை சவாலுக்கு உட்படுத்தினால் அரசாங்கம் கஸ்டத்தில் விழும்.
ஜனாதிபதிக்கும் தெரியாது திருட்டுத்தனமாக பொதுமன்னிப்பை எவராவது வழங்குவராக இருந்தால், அதனூடாக அரச பொறிமுறை ஜனாதிபதியிடம் இருந்து மீறிப்போயுள்ளது என்றே அர்த்தப்படுகின்றது என்றார்.
![]()