இலங்கை

நாடெங்கும் பொலிஸார் வலை வீசித் தேடுகையில் கூலாக நீதிமன்றம் வந்த பொது மன்னிப்புக் கைதி!

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை முறையற்ற வகையில் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதுல திலகரத்ன என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் நிலையில், அவர் தனக்கு எதிரான வேறு வழக்கு விசாரணையொன்றுக்காக நேற்று புதன்கிழமை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

இதேவேளை,அவரை சட்டவிரோதமாக பொதுமன்னிப்பை பயன்படுத்தி விடுவித்ததாக கூறி கைதான, அநுராதபுரம் சிறைச்சாலை பணிப்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணையை அந்த நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற போது அங்கிருந்து அதனை பார்வையிட்டுள்ள அதுல திலகரத்ன, தான் நீதிமன்றத்தில் இருக்கின்றேன் என்று கையுயர்த்தி நீதவானிடமும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை முறையற்ற வகையில் பயன்படுத்தி அதுல திலகரத்ன விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரின் விடுதலை தொடர்பில் அநுராதரபுரம் சிறைச்சாலை பணிப்பாளர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் கடந்த சில தினங்களாக, சட்டவிரோதமாக விடுதலையான அதுல திலக்கரட்ணவை குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற தனக்கு எதிரான வேறு வழக்கொன்றில் தனது சட்டத்தரணியுடன் கலந்துகொண்டிருந்ததுடன், அந்த விசாரணை முடிவடைந்த பின்னர், சிறைச்சாலை பணிப்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்ற பகுதிக்கு சென்று அங்கு பார்வையாளர் பகுதியில் இருந்து அந்த வழக்கு விசாரணைகளையும் பார்வையிட்டுள்ளார்.

இவ்வேளையில் சிறைச்சாலை பணிப்பாளர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் விளக்கமளித்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளள சிறைச்சாலை பணிப்பாளர் சட்டவிரோதமான முறையில் அதுல திலகரட்ணவை விடுவிக்கவில்லை என்றும், விடுதலையானவர் இந்த நீதிமன்றத்தில் இப்போது இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார். அவர் சட்டப்படி விடுதலையான காரணத்தினாலேயே இங்கே இருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அங்கிருந்த அதுல திலகரட்ன, தான் இங்கே இருக்கின்றேன் என்று கையுயர்த்தி நீதவானிடமும் கூறியுள்ளார். இவ்வேளையில் நீதிமன்ற வளாகத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளும் இருந்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த வழக்கு விசாரணை முடிந்த பின்னர், அங்கிருந்து அதுல திலகரட்ன அங்கே தனது நண்பர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாலேயே அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *