உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தமிழரசுக் கட்சியுடனும் தொடர்ந்து பேசுகிறோம்

தமிழர் நிலங்களைத் தமிழர்களே ஆள வேண்டும் என்ற எங்கள் கொள்கையின் அடிப்படையில் நாங்கள் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருகின்ற சூழலை உருவாக்கி வருகின்றோம். அந்த அடிப்படையில் தான் நாங்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்துடன் செயற்படுகின்ற வாய்ப்பை உண்டுபண்ணியுள்ளோம்.
இதேபோன்று தமிழரசுக் கட்சியுடனும் நாங்கள் தொடர்ந்து பேசி வருகின்றோம். அவர்களுடனான இணைப்பை நாங்கள் துண்டிக்கவில்லை. ஒற்றுமைக்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் கதவுகள் எப்போதும் திறந்துள்ளன என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக 2025 உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு- கிழக்கில் எந்தவொரு உள்ளுராட்சி சபைகளையும் தேசியமக்கள் சக்தி கைப்பற்றக் கூடாதென்ற வீறாப்புடன் எங்களுடைய கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர் ஆளவேண்டிய எங்கள் தேசத்தில் தேசியமக்கள் சக்தியின் ஆட்சி மலர நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எங்கள் இலட்சியத்துக்காக மடிந்த போராளிகள், பொதுமக்களின் இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் ஒரு வழிமுறை மூலம் தான் தமிழர் தாயகத்தைக் காப்பாற்ற முடியும்.
தமிழர் நிலங்களை அபகரிக்கின்ற செயற்பாடுகள் காலகாலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர் நிலங்களை அபகரிக்கின்ற செயற்பாட்டை இரகசியமாக மேற்கொண்டு வருகிறது. நிலம் இல்லையென்றால் ஒரு இனம் அந்த மண்ணில் வாழ்வதற்கான அருகதை அற்றதாகி விடும். எமது எதிர்கால சந்ததி இந்த மண்ணில் சுதந்திர இனமாகச் செயலாற்ற வேண்டும், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் போராளிகள் தங்கள் குடும்பங்களைப் பாராது, சொந்தங்களைப் பாராது இலட்சிய வேட்கையுடன் உயிர் நீத்திருக்கிறார்கள். தமிழர் நிலம் தமிழருக்கே சொந்தம். எங்கள் மண்ணை அந்நிய சக்திகள் அபகரிப்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் இலட்சியப் பாதையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
![]()