கருணா,பிள்ளையானையும் தமிழரசுக் கட்சி சந்திக்கலாம்!; சி.வி.கே.யின் பின்னணியில் இருப்பது யார்?

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது கட்சியின் அடிமட்ட தொண்டனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்தார்.
ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் எப்பொழுது ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்துக்குள் காலடி எடுத்துவைத்தாரோ, அந்த நொடியிலிருந்து தமிழரசு கட்சியின் கொள்கை – கோட்பாடு – அறம் அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டார். எனவே பதில் தலைவர் பதவியிலிருந்தும் தமிழரசு கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் அவர் வெளியேறுவதே சாலச்சிறப்பாகும் அத்துடன் அவருக்கு ( சி.வி.கே.சிவஞானம்) பின்னால் இருந்து இயங்குபவர்களும் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்.
தமிழரசு கட்சியில் பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.ஆனால் கட்சியின் கொள்கை – கோட்பாடு-அறத்தை தாண்டி எந்த தலைவரும் செயற்பட்டதில்லை. சி.வி.கே.சிவஞானம் மாத்திரமே இவ்வாறான ஒரு வேலையே செய்திருக்கிறார். இது தமிழரசு கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கருணா ஆகியோர் எங்களுடன் சேர்ந்து தமிழரசுக்கட்சி பயணிக்க வேண்டும் என்றனர்.எனவே தற்போதைய சூழ்நிலையில் சி.வி.கே.சிவஞானம் நாளை கூட கிழக்கு மாகாணத்துக்கு வந்து கருணா அம்மானையும் பிள்ளையானின் பிரசாந்தனையும் சந்தித்து கூட ஒன்றுபடக்கூடும். ஆகவே இனிவரும் காலங்களில் ஒட்டுக்குழு பற்றிய கதை ,டக்ளஸ் கதை ,பிள்ளையான் கதை பற்றி சி.வி.கே.சிவஞானமோ அவருடன் இருக்கும் தரப்புகளோ பேசக் கூடாது.
டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பின் பின்னணியில் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இருந்தாலும் அவரையும் நாம் எதிர்ப்போம். ஆகவே இந்த செயற்பாட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அல்லது உரிய பதில் தரப்படாவிட்டால் கட்சிக்குள் இருந்து தீவிர எதிர்ப்பை தெரிவிப்போம். 75 வருட பாரம்பரிய கட்சி தியேட்டருக்குள் கால் எடுத்து வைத்தது மிகப்பெரிய அவமானமாகும். பலமான கட்சியாக இருந்தும் பலவீனமான கட்சி என்ற தோற்றத்தை இந்த சந்திப்பினூடாக சி.வி.கே.சிவஞானம் வெளிப்படுத்தியிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
![]()