யாழில் சந்தேகத்தில் கூட்டிவரப்படும் 10 இல்7 மாணவர்கள் போதைக்கு அடிமை!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில்போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது.
உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார்.
இங்கு வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் குறிப்பிடுகையில்,
15 – 18 வரையிலான வயதுடைய 36 சிறுவர்கள் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி நீதிமன்றத்தால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார். அவர்களில் சிறுமிகளும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டினார்.
![]()