சசீந்திர ராஜபக்ச கைதாவாரா?; 71/2 மணி நேரம் விசாரணை

சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரம் இறக்குமதி செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை முன்னிலையாகியிருந்த நிலையில் அவரிடம் ஏழரை மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரம் இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய சசீந்திர ராஜபக்ச, முறையான மற்றும் துல்லியமான விசாரணையை நடத்துவதற்குத் தேவையான தொடர்புடைய விவரங்களை வழங்கியதாகக் கூறினார்.
எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம், என்று இந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் கைது செய்யப்படுவீர்களா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெறுதல் மற்றும் துறைமுகத்திலிருந்து சுங்க அனுமதியின்றி 323 கொள்கலன்களை விடுவித்தல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
![]()