இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி; மீட்கப்படும் மனித எலும்பு எச்சங்கள்..!

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் – அறிக்கைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்குமாறு கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்றே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, அந்தப் பகுதியை மனிதப் புதைகுழி என்று கூறுவதானால், அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகைளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி, பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அன்றைய தினம் அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவும் கட்டளை பிறப்பித்தார்.

இதனிடையே, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்த அகழ்வுப் பணியில் ஓர் எலும்புக்கூடு முழுமையாகவும், மற்றொன்று பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டன.

எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியிலேயே இந்த எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் மின் தகன மேடை அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்பு எச்சங்கள் முதன்முறையாக மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *