கோதா ஆட்சியை கவிழ்க்க நடந்த பல்வேறு சூழ்ச்சிகள்

முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டமையை அறிய முடிவதாகவும், இதனுடன் சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளனவா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மக்களுக்கு ஊசியில் மருந்துக்கு பதிலாக தண்ணீரை வழங்கியதாக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போது இவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டையே முன்வைத்தது. ஆனால் மக்களுக்கு ஊசியில் தண்ணீரே செலுத்தியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த தற்போதைய நளிந்த ஜயதிஸ்ஸவின் சுகாதார அமைச்சு அந்த ஊசியில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்று கூறியிருப்பதன் ஊடாக கோதாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கவும், அந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் பல்வேறு வகையில் நாட்டுக்கு வந்த டொலர் எந்தளவுக்கு செயற்பட்டுள்ளது என்பதனை புரிந்துகொள்ளலாம். நாங்கள் தகவல்களை தேடி வருகின்றோம்.
பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அந்த மருந்துகளில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கமே கூறுகின்றது என்றால் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பொய்களே சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இதில் சட்டத்தை செயற்படுத்தும் சில நிறுவனங்களின் தொடர்புகள் உள்ளனவா என்றும் எங்களுக்கு சந்தேகங்கள் எழுகின்றன என்றார்.
![]()