கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் – 11…. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

ஹிட்லர் லட்சக் கணக்கில் யூதர்களை வாயு கிடங்குகளில் தள்ளி கொன்றிருக்கிறார். இதுவெல்லாம் வரப்போகும் கல்கிக்கு அட்டூழியங்கள் தலைதெரித்து ஆடியதாக அப்போது தெரிந்திருக்கவில்லையா? இதை விட இன்னும் கொடூரங்கள் நடக்க வேண்டுமா? அவர் என்ன கணக்கு போட்டு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

இப்படியே நான்கு லட்சத்து இருபத்தி ஏழாயிரம் ஆண்டுகளும் முடியும் நேரத்தில்தான் வருவாரா? இப்பவே கொலைகளும் கொள்ளைகளும் ஏமாற்றும் திருட்டுத் தனமும் கற்பழிப்பும் லஞ்சமும் வன்கொடுமைகளும் அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இது நாளாக ஆக அதிகரித்துக்கொண்டே போகுமே ஒழிய குறையவே குறையாது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த மனநிம்மதியான வாழ்க்கை இன்று இருக்கிறதா? வசதிகள் வாய்ப்புகள் என்பவை வேண்டுமானால் விஞ்ஞான முன்னேற்றத்தால் அதிகரித்திருக்கலாம். ஆனால் கண்ணியமான வாழ்க்கை நேர்மையானதும் அமைதியானதுமான வாழ்க்கை இல்லை என்றே சொல்லலாம். அப்படியே கிடைத்தாலும் பொருளாதாரத்தில் செழித்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இப்படியிருக்க இதே நிலை நீடித்துக் கொண்டே போனால் மனிதர்களிடம் இருக்கும் மனிதநேயம் போய் மனிதனை மனிதன் அடித்து தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்படுவான். கிட்டத்தட்ட இதே நிலை சென்று கொண்டிருக்கும்போது அந்த நிலையில் தான் நம் பகவான் வருவாரா?

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதும் ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைகள் செய்வதும் நிலத்தகராறில் அண்ணன் தம்பிகள் வெட்டிக்கொலை செய்வதும் பள்ளி செல்லும் மாணவர்கள் மதுவிலும் போதையிலும் மயங்கிக் கிடப்பதும் மாணவன் ஆசிரியரைக் கத்தியால் குத்துவதும் லஞ்சம் வாங்குவது சட்டமாக்கப்பட்டது போலவே மாறி வருவதும் அதை தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்பதும் நடக்கவே நடக்கிறது.

இதையெல்லாம் கண்டும் காணாதது அரசு திகைத்து நிற்பதையும் பார்க்க முடிகிறது. இதுவெல்லாம் கல்கி பகவானுக்கு போதாதா? இதுவெல்லாம் போதாதென்றால் அவர் என்னதான் எதிர்பார்க்கிறார்.

ஒன்றுமே புரியலே உலகத்திலே.
என்னவோ நடக்குது மர்மமா இருக்குது ஒன்னுமே புரியல உலகத்திலே.

கண்ணிலே கண்டதும் கனவாய் தோணுது. காதிலே கேட்டதும் கதைபோல் ஆனது.

என்னான்னு புரியலே சொன்னாலும் விளங்கலே.
ஒன்றுமே புரியலே உலகத்திலேன்னு

அந்த பழைய பாடலில் வருமே அதுபோல

கண்ணான தந்தையை கண்ணீரில் தள்ளினேன்.
கண்ணாடி வளையலை பொன்னாக எண்ணினேன்.

பெண் ஆசைவெறியிலே தன்மானம் தெரியலே.
என்னைப்போலே ஏமாளி எவனுமில்லே

என்று நடிகர் சந்திரபாபு பாடும் நிலை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கிறது என்றால்

இன்னும் கலிகாலம் முடியும் போது என்னவெல்லாம் நடக்குமோ? பகவானென்றால் மக்கள்மேல் அன்பும் இரக்கமும் கருணையுமல்லவா இருக்கவேண்டும். இவர் மக்களை துயரத்தில் அழியவிட்டு காப்பதென்பது எந்தவகை நியாயமோ? ஒன்றுமே புரியல உலகத்திலே.

இன்றிருப்போர் நாளை இங்கு இருப்பதென்ன உண்மை என்று நம் வாழ்நாள் முடிந்ததும் செல்ல வேண்டியதுதான். அப்படியே கலிகாலமும் முடிவடையும். அதன்பின் ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து அப்போது வாழும் மக்கள் கல்கி பகவான் கலியுகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியாவில் சம்பாலாவில் தோன்றி அட்டூழிங்கள் செயவோரை வெள்ளைக்குதிரையில் வந்து அழித்தார் என்று அறிவார்கள்.

இதுதான் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதற்கு மூலாதாரமாகமோ இருக்குமோ? நாம் இப்போது எப்படி ஒன்பது அவதாரங்களை அறிந்திருக்கிறோமோ அப்படியே நான்கு லட்சத்து இருபத்து ஏழாயிரம் ஆண்டுகளுக்கு பின் சில ஆயிரம் ஆண்டுகளில் அப்போது வாழும் மக்கள் அறிவர். கல்கி பகவான் மட்டும் தோன்றாமல் இருந்திருந்தால் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போய் இவ்வுலகம் அழிந்தே போயிருக்கும் என்றும் கதைப்பார்கள்.

இன்று இவ்வளவு செழிப்புடன் நாம் வாழ்ந்திருக்கவே முடியாது. அதற்கெல்லாம் காரணம் கல்கி பகவான்தான் என்று மக்கள் எண்ணுவார்கள். ராமன், கிருஷ்ணன், நரசிம்மமூர்த்தி்யுடன் கல்கிபகவானும் வணங்கப்படுவார். கல்கி பகவானுக்கும் இந்தியா முழுதும் கோவில்கள் எழுப்பப் பட்டு புராணங்களில் நிலையான இடத்தைப்பெறுவார்.

மனிதர்களுக்குத்தான் வரலாறு. கடவுள்களுக்கு அது புராணம். அதை வரலாறு என்று நாம் எண்ணக்கூடாது. அப்படியே இன்னும் ஒரு நான்கு லட்சத்து சொச்சம் ஆண்டுகள் வரப்போகும் அடுத்த யுகத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். கொடுத்து வைத்தவர்கள். எல்லாம் புண்ணியம் செய்வதால் மட்டுமே அவர்களுக்கு அந்த வாழ்க்கை கிடைக்க இருக்கிறது.

கலிகாலம் பிறந்த இந்த ஐந்தாயிரம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் எல்லாமே பாவம் செய்தவர்கள்தான். அதனால்தான் இந்த கலிகாலத்தில் துன்பங்களை அனுபவித்து வருகிறோம். நாம் மட்டும் அல்ல இன்னும் நான்கு லட்சத்து இருபத்து ஏழாயிரம் ஆண்டு வரையிலோ அல்லது கல்கிபகவான் தோன்றும் வரையோ பிறந்து வாழ்பவர்கள் அனைவருமே பகவானின் கணக்குப்படி பாவம் செய்தவர்களே.

இல்லாவிட்டால் இந்த கலிகாலத்தில் பிறப்போமா அல்லது இனிவரப் போகிறவர்களும் பிறப்பார்களா? ஆதலால் கல்கிபகவான் வந்து காப்பாற்றி கலிகாலம் முடியும் வரை பிறந்து வாழ்பவர்களும் வாழப்போகிறவர்களும் பாவம் செய்தவர்களே அல்லது பாவம் செய்யப் போகிறவர்களே என்பது வெள்ளிடைமலை. இதெல்லாம் ஆண்டவன் விதித்த விதிப்படி நடக்கிறது. எல்லாம் அவன் செயல். அவனின்றி ஒரு அணுவும் அசையாது.

ஆகையினால்தான் மறுபிறவியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கலியுகம் முடியும் வரை எவ்வளவுதான் நாம் நன்மைகள் செய்தாலும் கலியுகம் நம்மை ஏதாவது ஒரு தீமை செய்து பிறப்பெடுக்க வைக்கும். அப்படி எத்தனை பிறப்பெடுத்தாலும் கலிகாலம் முடியும் வரை ஒவ்வொரு பிறவியிலும் கலியுக துன்பங்களில் இருந்து விடுபட முடியவே முடியாது.

ஆதலால் மறுபிறவி இல்லை என்று நம்பினால் மறபிறவி எடுத்து மீண்டும் கலியுகத்தில் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிப்போம் என்ற எண்ணமே வராமல் வாழும் நாளிலும் மனநிம்மதியோடு வாழ்ந்து விட்டுப்போகலாம். எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். அதற்கு உங்களுக்கு ஒரு உண்மை நிகழ்ச்சியை கூறுகிறேன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *