மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்பட மாட்டாது

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
மேலும், எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரச அதிகாரியோ இவ்வாறான செயலில் ஈடுபட்டால், தரம் பாராமல் அதிகபட்ச தண்டனை வழங்க தலையிடுவேன் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் செலுத்தும் வரிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கு எதிராக செயல்படும் கருப்புப் பொறிமுறையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படையை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டமான “வரி சக்தி” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக“ – என்ற தொனிப்பொருளின் கீழ் “வரி சக்தி – தேசிய வரி வாரம்” ஆரம்பித்தல் இதற்கு இணைந்தவகையில் நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கம் ஸ்தம்பிதமடைந்த ஒரு நாட்டைக் பொறுப்பேற்றதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வரி பொறிமுறையை நெறிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாடாக நாம் தகுதிகாண் காலத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் உடன்படிக்கையை இந்நாட்டின் அவ்வாறான இறுதி வேலைத்திட்டமாக மாற்றுவதன் மூலம் நமக்கே உரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சகல மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
வரி செலுத்துவதில் மக்களின் அவநம்பிக்கையான மனப்பான்மையை நம்பிக்கையான மனப்பான்மையாக மாற்றவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்ற புதிய வரிக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வரி சக்தி தேசிய வரி வாரம் செயல்படுத்தப்படுகிறது.
எதிர்வரும் 07 ஆம் திகதி வரையான வாரத்தில், வரி செலுத்துதல் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வரிப்பணம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதுடன் மக்களுக்கான நன்மைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத் தளத்தின் திறப்பு விழாவும் இங்கு நடைபெற்றதுடன், 2024/25 மதிப்பீட்டு ஆண்டிற்கான முதல் வரி வருமானமாக ஜனாதிபதி, தனது தனிநபர் வருமான வரி அறிக்கையை இணையத் தளத்தில் பதிவேற்றார்.
மேலும், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ASYHUB முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெர்மன் அரசு மற்றும் UNCTAD ஆகியவற்றின் ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பின் மூலம், இறக்குமதியாளர்களுக்கு பொருட்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு வரி செயற்பாடுகளை முடிக்க வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அதன் மூலமாக, சுங்கத்தால் செயல்படுத்தப்படும் அபாயங்கள் முகாமைத்துவம் மென்பொருள் மூலமாகவும், அபாயங்கள் அற்ற கொள்கலனை கப்பலில் இருந்து நேரடியாக சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளுக்கு கொண்டு செல்ல வசதிகளை ஏற்படுத்தும். சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்படும் மதுபான போத்தல்களை பாதுகாப்பு அடையாள முறையின் ஊடாக அடையாளம் காணும் தொலைபேசி செயலியை மதுவரி அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இங்கு உரையாற்றியதுடன், வர்த்தக சமூகம் மற்றும் மக்களின் வரி செலுத்தும் இணக்கத்தை மேம்படுத்தி வரி அடிப்படையை வலுப்படுத்துவதே வரி வாரத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கும்போது, வரி செலுத்துவது நாட்டிற்கு நல்லெண்ணத்தில் செய்யப்படும் முதலீடாகும் என்று தெரிவித்தார்.
“Clean Sri Lanka” நிகழ்ச்சித் திட்டத்தின் அழைப்பாளர் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, இங்கு கருத்துத் தெரிவிக்கையில், வரி செலுத்துவதன் மூலம் கட்டியெழுப்பப்படும் சுபீட்சம் நெறிமுறை சார்ந்த அபிவிருத்தியுடன் கூடிய நாட்டிற்கு இன்றியமையாத விடயமாகும் என்று தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை,
நாம் எந்த ஒரு பொருளாதார முடிவையும் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் எடுப்பதில்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நாங்கள் அனைத்து பொருளாதார முடிவுகளையும் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கிறோம். அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் பொருளாதார முடிவெடுப்பது நாட்டின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் ஆகும். இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீள முடியாததால், வெளிப்புற தரப்பினரிற்கு கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மேலிருந்து நாம் செயற்படுத்தப்படுகின்றோம். நாம் பெற்ற அதே வருமான இலக்குகள் எமக்கு இன்று இலக்குகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, தேசிய உற்பத்தி வருமானத்தை 15.1% ஆக அதிகரிக்க வேண்டும். அதில், 2.3% முதன்மைக் கணக்கில் மேலதிகமாக பேணப்பட வேண்டும்.
செலவு எல்லைகள் மற்றும் வருமான இலக்குகள் தொடர்பான வெளிப்புற தரப்பினரின் இணக்கப்பாடுகளின்படி நாம் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும். ஏன்? நாம் ஒரு மோசமான பிள்ளை. இப்போது நாம் தண்டிக்கப்பட்டு, நன்னடத்தை கண்காணிப்பில் இருக்கிறோம். நமது பொருளாதாரம், நமது சொத்துக்கள் அனைத்தும் சோதனைக் காலத்தில் உள்ளன. நாம் எப்போதும் சோதனைக் காலத்தின் பொருளாதாரமாக இருக்க வேண்டுமா? இல்லை. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் நடந்த கலந்துரையாடலில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தில் நுழைந்த கடைசி வாய்ப்பாக இது இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம்.
நாம் நமக்கே உரிய அளவுகோல்களையும் இலக்குகளையும் நிர்ணயிக்க வேண்டிய ஒரு பொருளாதாரப் பயணத்தைத் தொடங்க வேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில், நமது பொருளாதாரத்தை பொது மக்களின் தேவைகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுடன் கட்டமைக்க வேண்டும். ஆனால் நாம் ஓரளவிற்கு தகுதிகாண் காலத்தில் இருக்கும் ஒரு பொருளாதாரத்தை நடத்தி வருகிறோம். எனவே,சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தில் நுழைந்த கடைசி வாய்ப்பாக இதனை மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த இலக்கை அடைய, நாம் நமது அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்த அரச வருமானத்தில் பெரும் பகுதி வரிகளிலிருந்து கிடைக்கிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம், ஆகியவை அந்த வரிகளை வசூலிக்க மிகப்பெரிய அளவிலான பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. எனவே, வரி செலுத்துவோர், வரி வசூல் பொறிமுறை மற்றும் அந்த வரி பணத்தை நிர்வகிப்பவர்கள் என, இந்த செயற்பாட்டை வெற்றிபெறச் செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். சோதனைக்குட்பட்ட பொருளாதாரத்தை நமக்கே உரிய இறையாண்மை கொண்ட பொருளாதாரமாக மாற்ற பாடுபடுவோம்
![]()