வடக்கில் ஆட்சியமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே பெரும் இழுபறி நிலை!; விட்டுக் கொடுப்புக்கு எவரும் தயாரில்லை

உள்ளூராட்சி சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்ற நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்படுகிறது.
வடக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும் சில சபைகளிலேயே அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்கிறது.ஏனைய சபைகளில் அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் ஏனைய கட்சிகளின் தயவுடனயே ஆட்சி அமைக்கும் நிலை காணப்படுகிறது.
தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களோ வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியை ஆட்சியமைக்க விடமாட்டோம் எனவும் கூட்டாக இணைந்து தமிழ் தேசிய தரப்புகளின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம் என தெரிவித்து வருகின்றனர்.
அதிக ஆசனங்களை பெற்ற தமிழ் தேசிய கட்சிக்கு ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் தமது ஆதரவை வழங்கி தமிழ் தேசிய கட்சிகளின் ஆட்சியை நிறுவுவோம் என தமிழ் தேசிய கட்சிகளின் பல தலைவர்கள் தெரிவித்தாலும் அதற்கான சாதகமான சமிக்ஞைகள் இதுவரை ஏற்பட்டதாகவில்லை.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று தமிழ் தேசிய கட்சிகளும் ஆட்சியமைப்பது தொடர்பாக தனித்தனியாக பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் ஏதாவது ஒரு சபையிலாவது ஆட்சியமைப்பதை உறுதிப்படுத்த இணக்கம் ஏற்படவில்லை.
தமிழ் அரசுக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள மன்னாரில் ஒரு சபை, யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், சாவகச்சேரி என நான்கு சபைகளில் நல்லெண்ண அடிப்படையில், தாங்கள் ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்குமாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கேட்டுள்ளதுடன் அது குறித்து தமிழ் அரசுக் கட்சியுடன் பேசி வந்த போதும் தமிழ் அரசுக் கட்சி தற்போது அதற்கு இணங்க மறுத்துள்ளதுடன் வடக்கில் தாங்கள் பெரும்பான்மையைப் பெற்றுள்ள 35 சபைகளிலும் தாங்கள் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்குமாறு கேட்டு வருகிறது.
இதேவேளை வவுனியா மாநகர சபை உள்ளிட்ட சபைகளில் தாம் ஆட்சி அமைக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரியிருந்தபோதும் அதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி பச்சைக் கொடி காட்டவில்லை.
இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலும் நீண்டநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றபோதும் அதுவும் முடிவின்றியே முடிந்துள்ளது. தமிழ் அரசுக் கட்சியினருடனான சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
கொள்கை ரீதியான இணக்கமே எமக்கு முக்கியம். ஆட்சி அமைப்பது மற்றும் பதவிகளுக்காக தாம் அலட்டிக் கொள்ளவில்லை. கொள்கை ரீதியான இணக்கம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள்,பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேச சபையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுமே அறுதிப் பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கில் ஏனைய சபைகள் அனைத்திலுமே அறுதிப் பெரும்பான்மை உறுதிப்படுத்தப்படுத்தில் தமிழ் தேசிய கட்சிகளிடையே தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது.
![]()