இலங்கை

ஆறு மாத காலத்துக்குள் அரசை குறைகூற முடியாது; விஜயதாச தெரிவிப்பு

நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆறு மாத காலத்துக்குள் அரசாங்கத்தை குறை கூற முடியாது. ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் தான் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கினோம். இந்த சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவும், ராஜபக்ஷர்களும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்தினார்கள்.

நாடு வங்குரோத்து நிலையடைந்ததை தொடர்ந்து அரசியல் கட்டமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் கடும் அதிருப்தியை கொண்டிருந்தார்கள். இவ்வாறான நிலையில் மாற்றீடு ஒன்று இல்லாத காரணத்தால் தான் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஜனநாயக ரீதியில் மக்கள் இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்கள்.

நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. சிறந்த தீர்மானங்களுக்கு அரசியல் நோக்கங்களுக்கு அமைப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆறு மாத காதத்துக்குள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்க முடியாது. குறைகூற முடியாது.

ஊழல் மோசடியால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஊழலை இல்லாதொழிக்கவும், ஊழல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கினோம். இந்த சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *