நைஜீரியாவில் மழை வெள்ளத்தில் மூழ்கிய மோக்வா நகரம் ; நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக அந்த நாட்டின் மோக்வா நகரம் வெள்ளத்தில் முழ்கியதில் 111 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜா் மாகாணத்திலுள்ள மோக்வா நகரம் வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையாகும். மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால், நகருக்குள் வெள்ளம் புகுந்து அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஏராளமானவா்கள் உயிரிழந்துள்ளனா். கனமழையால் பாதிக்கப்பட்ட பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 111 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடா்ந்து நடைபெற்றுவரும் தேடுதல் நடவடிக்கைகளில் மேலும் பல சடலங்கள் மீட்கப்படலாம் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகளை நைஜீரியா அடிக்கடி சந்தித்துவருகிறது. இதில் நைஜா் மற்றும் பென்யூ நதிக் கரைகளில் வசிப்பவா்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பா் மாதம் பருவமழை காரணமாக நைஜீரியாவின் மைடுகுரி நகரில் இதே போன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 30 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()