இலங்கை

உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் நிறுவப்பட்ட புத்தர் சிலையால் சர்ச்சை

அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவின் தெற்கு எல்லையில், தமிழர்களின் புராதன வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட உகந்தை முருகன் ஆலயப் புனிதப் பிரதேசத்தில், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையில் கடற்படையினரால் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக பல்வேறு எதிர்மறையான கருத்துகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தை ஆராயும் நோக்கில், எமது ஊடகவியலாளர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் குழு அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று, குறித்த புத்தர் சிலை நிர்மாணம் குறித்து ஆய்வு செய்தது. ஆலயத்தில் இருந்தவர்களிடம் பேசியபோது, இந்த புத்தர் சிலை நிறுவும் பணி 2023இல் தொடங்கப்பட்டு, 2024இல் ஒரு சிலை நிறுவப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் புத்தர் சிலை பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று அவதானித்தபோது, முருகன் ஆலயத்திற்கு முன்பாக, கடற்கரைப் பகுதியில் வலது புறம் வள்ளியம்மன் மலை, தோணிமலை போன்றவையும், இடது புறம் கடற்படை முகாமுடன் இணைந்த ஒரு மலையும் காணப்பட்டன. இந்த மலையில்தான் குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. உகந்தை ஆலயப் பிரதேசம், சைவத் தமிழர்களின் பூர்வீக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இவ்வாறு இருக்கையில், இந்த புத்தர் சிலை எவ்வாறு, யாரால், எதற்காக நிறுவப்பட்டது, இதன் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது.

அவதானிப்பின்போது, கடற்படை முகாமில் இருந்து வந்த சிவில் உடை அணிந்த இருவர் அந்த சிலை அமைந்த மலையைத் துப்புரவு செய்வதைக் காண முடிந்தது. இந்தச் சிலை கடற்படையினருக்கு தெரியாமல் வேறு யாராலும் நிறுவப்பட்டிருக்க முடியாது, ஏனெனில் இது கடற்படை முகாமுடன் இணைந்த மலைப் பிரதேசமாகும். இந்தச் சிலையை கடற்படையினர் தங்கள் வழிபாட்டிற்காக நிறுவியிருக்கலாம் என்ற கருத்தும் அங்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு வழிபாட்டிற்காக நிறுவப்பட்டிருந்தால், அதை கடற்படை முகாமிற்குள் வைத்திருக்கலாமே, ஏன் உகந்தை முருகன் ஆலயத்தின் திருவெம்பாவைக் காலத்தில் தீர்த்தமாடும் பொது இடத்தில் நிறுவப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

மேலும், உகந்தை முருகன் திருவெம்பாவைக் காலத்தில் தீர்த்தமாடும் இந்தப் பிரதேசத்தில், முன்னர் ஒரு சூலம் நிறுவப்பட்டிருந்ததாகவும், தற்போது அது அகற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூலம் யாரால், எதற்காக அகற்றப்பட்டது என்பதும் ஆராயப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது.

இன்றைய தினம், ஆலயத்திற்கு புலனாய்வுத் துறையினர் வருகை தந்து, இந்தச் சிலையை யார் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் வெளியிட்டார்கள் என்று விசாரித்ததாகவும், பாதுகாப்பு வழங்குவதற்காக இரு பொலிஸார் அங்கு நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பொலிஸாரையும் அப்பகுதியில் காண முடிந்தது. மேலும், அந்த இடத்தில் ஒரு பதட்டமான மற்றும் அச்சமூட்டும் சூழல் நிலவுவதையும் நாங்கள் அவதானித்தோம். இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்த பின்னர், எமது குழு அங்கிருந்து வெளியேறியது என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய கேள்வி எழுகிறது: உகந்தை முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வள்ளியம்மன் மலையில் முருகன் சிலை நிறுவுவதற்கு வன இலாகா மற்றும் பிற துறைகள் தடை விதித்திருந்த நிலையில், இந்த புத்தர் சிலையை நிறுவுவதற்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை?

எனவே, இந்தச் சிலை நிறுவப்பட்டதன் பின்னணி என்ன என்பதையும், இது தொடர்பான உண்மைகளையும் உரிய துறைகள் உடனடியாக விசாரித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தச் சிலை நிறுவப்பட்ட விவகாரம், சைவத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு, மற்றொரு சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் பேசுபொருளாகியுள்ளது.

அதனால், இந்த அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, குறித்த புத்தர் சிலையை அகற்ற வேண்டும் என்று எமது கோரிக்கையை முன்வைக்கிறோம். மேலும், இந்த விவகாரத்தைப் பற்றி பேசும்போது, “சன்னியாசி மலையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அங்கும் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது” என்று அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *