இலங்கை

நாட்டில் நடந்தது இனவழிப்பு என்று கூறிக் கொண்டு நினைவேந்தலுக்கு இடமளிக்கக் கூடாது!

நாட்டில் நடந்தது இனவழிப்பு என்று கூறிக்கொண்டு நினைவேந்தல்களை நடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பான கிருமிகள் உருவாக வழிவகுக்கலாம் எனவும், இதனால் நகத்தால் கிள்ளி எடுக்கக்கூடியதை கோடாரியால் வெட்டும் நிலைக்கு கொண்டு சென்றுவிடக் கூடாது என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் சோதனை சாவடிகளை குறைக்க முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தொழில் நுட்பங்களுடான முறையான திட்டங்கள் இருக்க வேண்டும் என்றும், இல்லையேல் அதனால் கிடைக்கக்கூடிய பெறுபேறுகள் நல்லதாக இருக்காது என்றும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றில், இனவழிப்பு நினைவுத் தூபியொன்று கனடாவில் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் முள்ளிவாய்க்காலில் தமிழ் இனவழிப்பு வாரம் நினைவு கூரப்பட்டமை மற்றும் வெள்ளவத்தை, நீர்கொழும்பில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டமை தொடர்பிலும், வடக்கில் பாதுகாப்பு வலயங்களில் வீதிகள் திறக்கப்படுவது தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார்.

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த சரத்பொன்சேகா மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் தாம் அங்கேயே வசிக்கக் கூடியவாறு, தமது வீசாவை பெற்றுக்கொள்வதற்காகவும், வர்த்தகத்தை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் இலங்கையில் இனவழிப்பு நடக்கின்றது. வடக்கு, கிழக்கை அழிக்கின்றனர் என்ற பிரச்சினைகளை உருவாக்கி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். கனடாவில் சில பிரதேசங்களில் பெருமளவான தமிழர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் செய்பவர்களும் உள்ளனர். அரசாங்கம் இந்த நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதில் நாட்டுக்கு ஆபத்தின் நிழல் உள்ளது. இதில் இருந்து மீள வேண்டுமாயின் தினமும் எவரிடமும் கை நீட்டிக்கொண்டு பிச்சைக்காரர் போன்று இருக்காது, மண்டியிட்டுக்கொண்டு இருக்காது பலமான நாடாக மாற வேண்டும். நாங்கள் உறங்கிக்கொண்டிருந்தால் மீண்டும் புலிகள் தலைதூக்கலாம். வடக்கில் அரசியல்வாதிகள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு காட்டும் கரட்டே தனிநாடு தொடர்பான கதைகள். இவ்வாறான கரட்டை காட்டிய அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகளாலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் இந்தக் கிருமிகள் இருக்கின்றன. பலவீனமான தலைவர்கள் இருந்தால், அனைத்து வழிகளிலும் நாடு வீழ்ச்சியடைந்தால் அந்த அபாயம் இருக்கின்றது.

இதேவேளை தேசிய பாதுகாப்பு எமது பொறுப்பாகும். இது கடையில் பாண் வாங்குவது போன்றதல்ல. இதனால் இதனை சர்வதேச நாணய நிதியம் தீர்மானிக்க முடியாது. இராணுவத்தினரை குறைத்து அந்த பணத்தில் வேறு எதனையும் செய்ய முடியாது. தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். யுத்த காலத்தில் இருந்த பாதுகாப்பற்ற நிலைக்கு மீண்டும் தள்ளப்பட வேண்டுமா?

நான் பார்க்கும் மட்டத்தில் தேசிய பாதுகாப்பு இருப்பதாக நான் கருதவில்லை. யுத்தம் உள்ள வலயம் என்ற நிலையில் வேறு நாடுகள் எம்மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு முகம்கொடுக்கக்கூடியவாறு இருக்க வேண்டும். இப்போது அவ்வாறான நிலைமை இல்லாவிட்டாலும் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுக்க வேண்டியவாறு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

அதேபோன்று வடக்கில் சில இடங்களில் சோதனை சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. சில வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை செய்வதற்கு முன்னர் வேறு மாற்று வழிகளை பின்பற்றியிருக்க வேண்டும். குறிப்பாக நவீன தொழில்நுட்ப விடயங்களை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யாது முகாம்களை மூடுவதாலும், சோதனைச் சாவடிகளை நீக்குவதாலும் மறை பெறுபேறுகளே இருக்கும்.

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதியொன்று திறக்கப்பட்டுள்ளது. ஆனையிறவு சோதனை சாவடி நீக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ் மக்கள் சுதந்திரமாக போய்வரலாம் என்று கூறலாம். ஆனால் அதற்குள் பாதாளக் குழுக்களும் புக முடியும். ஆயுதங்கள், போதைப் பொருட்களையும் கொண்டு செல்ல முடியும். இதனால் சில விடயங்கள் இருப்பது நல்லது. இதனை நீக்குவதால் நஷ்டமே ஏற்படும்.

இதேவேளை யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருவதில் பிரச்சினையில்லை. ஆனால் பிரபாகரன் இறந்த தினத்தில் அதனை நினைவுகூர வேண்டி அவசியம் கிடையாது. தமது உறவினர்கள் உயிரிழந்த தினமும் சரியாக அவர்களுக்கு தெரியாது. ஆனால் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை நினைவு கூருவதும், அவர்களுக்கு கௌரவமளிப்பதும் தவறாகும். அத்துடன் அரசியல்வாதிகள் சென்று இனவழிப்பு தினம் என்று வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தால் அதுவும் தவறே.

இதனைத் தடுக்க வேண்டும். இதனை செய்ய இடமளித்தால் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பான கிருமிகள் உருவாக வழிவகுக்கலாம். இதனால் நகத்தால் கிள்ளி எடுக்கக் கூடியதை கோடாரியால் வெட்டும் வரையில் இருக்கக் கூடாது.

அதேபோன்று பொதுமக்கள் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். இப்போது நாட்டில் அவ்வாறான பாதுகாப்பு இருப்பதாக கூற முடியாது. பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான நிறுவனங்கள் பலமாக இருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்கள் இருக்க வேண்டும். நாட்டை நேசிப்பவர்கள் இருக்க வேண்டும். அவ்வாறானவர்கள் இருந்தால் பொதுமக்கள் பாதுகாப்பில் முன்னேற்றம் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *