இலங்கை

உகந்தைமலை புத்தர் சிலை விவகாரம்: அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

”உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை சட்ட விரோதமாக அமைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும்” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொடுவாமடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உகந்தை மலையில் முருகன் ஆலயத்திற்கு பக்கமாக இப்போது சட்டவிரோதமாக ஒரு புத்தர் சிலையை அமைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இப்போது அந்த இடத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்ற ஒரு விடயம் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சகல மக்களையும் சமத்துவமாக சம தர்மமாக வழிநடத்த வேண்டும் என்கின்ற உங்களுடைய வார்த்தைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்ற வேளையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு கலாசார ரீதியான பண்பாட்டு ரீதியான ஒரு ஆக்கிரமிப்பை அல்லது முருகன் ஆலயத்திற்கு பக்கத்தில் இன்னும் ஒரு சிலையை நிறுவுவதன் மூலமாக நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தாமல் இவ்வாறான சட்ட விரோதமான செயற்பாடுகளை தடுக்க வேண்டும்.

குறிப்பாகச் சொல்லப் போனால் வன வள திணைக்களமானது இந்த விடயத்தில் அக்கறை இன்றி இருக்கின்றது. அல்லது அனுமதி கொடுத்து இருக்கின்றது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் முருகன் ஆலயம் அமைக்கின்ற விடயத்தில் அவர்கள் தடைகளை விதித்திருந்தார்கள் ஆனால் புத்தர் சிலை வைக்கின்ற விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

இது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும்.இதனை அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற விளைவுகளை கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று ஏற்படுவதற்கு வழி கூறும் என்பதனை கூறிக் கொள்கின்றேன்” இவ்வாறு சிறிநேசன் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *