இலங்கை

உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமனத்தில் குளறுபடி கட்சிக்குள் சஜித்துக்கு எதிராக போர்க் கொடி!; தொகுதி அமைப்பாளர்கள் பலரும் தொடர்ச்சியாக இராஜினாமா

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் தொடர்ச்சியாக தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வரும் நிலையில் கட்சியின் தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவபொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ள தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சம்பக விஜேரத்ன, இறத்தொட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹார, நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அசோக செபால, காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட ஆகியோர் தங்கள் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்து, இராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக நெருக்கடிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன, மேலும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் நியமனம் தொடர்பான சிக்கல் நிலைமையை அந்த நெருக்கடிகள் இந்த பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தொடர்ச்சியாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய தலைமை தேவையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேணிக் கொண்டு கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்தை குடிமக்கள் எதிர்பார்க்கும் ஒரு திட்டமாக மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்றும் இலங்கையை வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்ல, தனது கட்சியின் வேலைத்திட்டத்தை, அதற்கான திறன், அறிவு மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு புதிய தலைமையிடம் ஒப்படைப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான நெருக்கடி தற்போது தீவிரமாகி வரும் நிலையில், கட்சித் தலைமை எடுத்த முடிவுகளால் பல தொகுதி அமைப்பாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளமையால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கர் விலகியிருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகிய போது இந்த இடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *