இலங்கை

வடக்கில் 5700 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் வர்த்தமானியை வாபஸ் பெற்றேயாக வேண்டும் வட, கிழக்கு தமிழ் எம்.பி.க்கள் ஒரேயடியாக விடாப்பிடி

வடக்கின் கரையோர பகுதிகளை சேர்ந்த 5700 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் வர்த்தமானியை வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்று வடக்கு கிழக்கு தமிழ் எம்.பி.க்கள் விடாப்பிடியாக நின்ற நிலையில்,வர்த்தமானியை அணுகும் முறையில் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, மக்களுக்கு பிரச்சினையில்லாதவாறு இந்த விடயத்தை தீர்த்துக்கொள்வதற்கு அடுத்து வரும் வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

வடக்கின் காணி சுவீகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற குழு அறை ஒன்றில் வெள்ளிக்கிழமை(23) வடக்கு,கிழக்கு தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

எனினும் இந்த கலந்துரையாடலில் வடக்கு,கிழக்கு தமிழ் எம்.பி.க்களின் வலியுறுத்தலுக்கமைய அந்த வர்த்தமானியை வாபஸ் பெறுவது தொடர்பிலோ அல்லது இது தொடர்பான மாற்று நடவடிக்கைகள் தொடர்பிலோ இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீதரன், சத்தியலிங்கம் , குகதாசன் ஆகியோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் ஆகியோரும் மற்றும் வடக்கு கிழக்கை சேர்ந்த ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், காணி அமைச்சர் லால்காந்த, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்த போது, பிரதமர் மற்றும் காணி அமைச்சரால் அரசாங்க தரப்பு நியாயங்களும் முன்வைக்கப்பட்டன.

இதன்போது சிறீதரன் மற்றும் கஜேந்திரகுமார் உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பால், குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதுடன், அதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன.

தமது தரப்பு விடயங்களை முன்வைத்து அவர்கள் கூறுகையில்,

மார்ச் மாதத்தில் வெளியாகிய காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதாவது, இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மூன்று மாதங்களுக்குள் குறிப்பிட்ட காணிகளை தங்களுடையது என்று உறுதிப்படுத்த உரிமையாளர்களுக்கு முடியாது போகுமிடத்து அந்த காணிகள் அரச காணியாக பிரகரடனப்படுத்தப்படும். இதுவே இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கமும். இது வடக்கு, கிழக்கு மக்களின் காணி உரிமைகளை பறிப்பதாகவே அமையும்.

மக்கள் யுத்தத்தால் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். இதன்போது அவர்களின் காணி தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயிருக்கலாம். அதேபோன்று சுனாமியின் போதும் வீடுகள் அழிவடைந்து காணி ஆவணங்கள் இல்லாமல் போயுள்ளன. இதனால் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைனகள் உள்ளன.

அதேபோன்று சுனாமியால் கரையோர மக்களே பாதிக்கப்பட்டனர். ஆனால் அரசாங்கத்தின் இந்த வர்த்தமானி அறிவித்தலும் நான்கு கரையோர மாவட்டங்களை இலக்காகக் கொண்டதாகவே இருக்கின்றன. இதனால் இந்த வர்த்தமானி அறிவித்தல் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு சனத்தொகையில் பெருமளவானவர்கள் யுத்த காலத்தில் அச்சத்தில் தமது சொத்துக்களை கைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இப்போது காணிகளை உறுதிப்படுத்துவதற்காக நாடு திரும்ப முடியாத நிலைமையில் இருக்கின்றனர். அவர்கள் வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சமும் இருக்கின்றது. இதனால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தமது காணிகளை உறுதிப்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாக இருக்கின்றனர். இதனால் காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்வதே பொருத்தமாக இருக்கும் எனவே அரசு அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த வர்த்தமானி தொடர்பில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவாறு கருத்துக்களை வெளியிட்டனர். குறிப்பாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவும் இது தொடர்பில் கூறியுள்ளார்.

இவ்வேளையில் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த வர்த்தமானி தொடர்பான அணுகுமுறைகளில் பிரச்சினைகள் இருப்பதனை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த வர்த்தமானியின் நோக்கம் மக்களின் காணிகளை சுவீகரிப்பது அல்ல. உரித்து தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதே இதன் பிரதான நோக்கம். இது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வர்த்தமானி தொடர்பான அணுகுமுறையில் இருக்கும் குறைபாடுகளே அதற்கு காரணமாக இருக்கின்றன.

எவ்வாறாயினும் மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கே எதிர்பார்க்கின்றோம்.

செயற்குழுவையோ அல்லது ஆணைக்குழுவையோ அமைத்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குறைபாடுகளை நிவர்த்தி செய்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தார்.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த காணி அமைச்சர் லால்காந்த, இந்த விடயம் தொடர்பில் அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என்று கூறினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *