‘ஆடிவேல்’ திருவிழா அல்ல இனி ‘ஆனிவேல்’ திருவிழா; கவீந்திரன்எம்.பி.விசனம்

இம்முறை ஆடிவேல் திருவிழா, ஆனிவேல் திருவிழாவாக மாற்றப்பட்டுள்ளது. திருவிழா உற்சவம் ஒருமாதத்துக்கு முன்னதாக மாற்றப்பட்டுள்ளது.கண்டியில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியே மாற்றப்பட்டுள்ளது.இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் ஒரு செயல் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கதிர்காம பாதயாத்திரை அதாவது செல்வ சந்நிதியில் இருந்து உவந்தை ஊடாக கதிர்காமத்துக்கு யாத்திரிகள் நடைபவனியாக செல்வார்கள். இது இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறை.
இம்முறை ஆடிவேல் திருவிழா, ஆனிவேல் திருவிழாவாக மாற்றப்பட்டுள்ளது. திருவிழா உற்சவம் ஒருமாதத்துக்கு முன்னதாக மாற்றப்பட்டுள்ளது.இதனை இந்துக்களின் மனதை புண்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கிறோம். நேர கால அடிப்படையில் தான் யாத்திரிகர்கள் கதிர்காமத்துக்கு காட்டு வழியூடாக செல்கிறார்கள்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடனோ அல்லது அம்பாறை மாவட்டத்தில் உள்ள மதத் தலைவர்களுடனோ கலந்துரையாடாமல், கண்டியில் உள்ள மதத் தலைவர்களுடனும் பிற தரப்பினருடனும் கலந்துரையாடி வேல் திருவிழாவின் காலம் மாற்றப்பட்டுள்ளது.
இந்துக்கள் காலம் காலமாக தொன்றுத்தொட்டு கடைப்பிடித்து வரும் கலாசாரம் மற்றும் மத வழிபாடுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மதிப்பளிக்க வேண்டும். இன,மத பாகுபாடு இருக்க கூடாது என்று குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் மீண்டும், மீண்டும் தவறிழைக்கப்படுகிறது. இவ்வாறான தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
![]()