பிரபாகரனுக்கு சிலையா? நான் கூறினேனா?

எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான் பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா ?நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,
நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி. அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார். எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனையும் கூறவில்லை.
எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர. நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன். அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன .
அதேபோன்று 89 ஆம் ஆண்டு மரணமடைந்த பெருமளவானோர் உள்ளனர். அவர்கள் இன்றும் எமது உள்ளத்தில் நிலைத்திருக்கின்றனர்.
அவ்வாறு எங்கள் அனைவருக்கும் தலைமைத்துவம் வழங்கிய எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட நான் இதுவரை எங்கும் கூறியதில்லை. அவ்வாறான நான் வேறு ஒருவருக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா? அந்த வகையில் மேற்படி கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இந்தளவு அடிமட்டத்திற்கு சென்றுள்ளனர் என்பது தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.இந்த நாட்டில் மரணமடைந்தவர்கள் பாரிய அளவில் உள்ளனர். அவ்வாறு மரணமடைந்த அனைவருமே எமது சகோதரர்கள். அவர்களுக்காக நான் முன் நிற்பேனே தவிர, ஒரு நபர் அல்லது ஒரு தலைவருக்காக நான் முன்னிற்க மாட்டேன்.
பிரபாகரன் மட்டுமல்ல. உமா மகேஸ்வரன், சபாரெத்தினம் என பல தலைவர்கள் இருந்தனர். அவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக சில கனவுகளை கண்டனர். எனினும் அவை தோல்வி கண்டன.
அவர்கள் இறந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டில் நல்லுறவை கட்டி யெழுப்புவதற்காக நாம் முன்வந்துள்ளோம்.
நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கும் மீண்டும் நாட்டில் இனவாதத்தை கொண்டு வருவதற்கும் அத்துடன் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. தொடர்பில் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியினரை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
![]()