பல கட்சி ஆட்சி முறைமையை நீக்கி ஒரு கட்சி ஆட்சிக்கு அரசு முயற்சிக்கிறதா?

நாட்டில் பல கட்சி ஆட்சி முறைமையை இல்லாமல் செய்து ஒரு கட்சி ஆட்சி முறைமைக்கு செல்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பி. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிதி சட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தென்பகுதியில் உள்ள கிராம வீதிகளும், அந்த கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றது என்றும் முன்னர் பேசியவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். உங்களுக்கே இவ்வளவு பிரச்சினை இருக்கின்றது என்றால் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களின் வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எங்களுக்கும் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர். எனினும் 60க்கு 40 வீதம் என்ற இந்த தேர்தல் முறைமையானது தனியொரு கட்சியினால் சபைகளில் ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வென்றவர்கள் வட்டார ரீதியில் வென்றிருந்தாலும் சபையில் தனிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலைமையே உள்ளது. இதனால் சேரக்கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுடன் சேர்ந்து தமது பிரதேச மக்களுக்குரிய அடிப்படை சேவைகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் முயற்சிக்கின்றோம்.
ஆனால் எதிர்க்கட்சிகள் அமைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். இவர் மிகவும் மதிக்கப்படும் ஒரு அமைச்சராவார். இவர் கூறியது ஆச்சரியமாக இருக்கின்றது. ஏன் அவர் இப்படி கூறினார். அதாவது இந்த நாட்டில் பல கட்சி ஆட்சி முறைமையை இல்லாமல் ஒரு கட்சி ஆட்சி முறைமைக்கு செல்ல எத்தனிக்கின்றீர்களா? அதற்கான பதிலை அமைச்சர் கூற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
சூழ்ச்சித் திட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் அமைக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாது. சிறு சிறு குழுக்கள் இணைந்து ஆட்சிமைப்பது ஜனநாயக்கத்திற்கு விரோதமானது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த தேர்தல் முறைமை அவ்வாறுதான் இருக்கின்றது. அமைசசர் இவ்வாறு கூறியிருந்தால் நாங்கள் மனம் வருந்துகின்றோம்.
இதேவேளை தேர்தலில் கசிப்பு வழங்கி வெற்றிபெற்றதாக கூறியுள்ளனர். ஆனால் தமிழரசுக் கட்சி போதைக்கு எதிரான கட்சியாகும். ஒரு சிலர் அவ்வாறான தவறை செய்திருந்தாலும் கட்சி என்ற ரீதியில் அவ்வாறு நடக்கவில்லை என்பதனை கூறுகின்றேன். அதேபோன்று நாங்கள் இனவாதம் பேசுவதாகவும் கூறியுள்ளனர். நாங்கள் இனத்தின் இருப்பை பற்றி மாத்திரமே பேசுகின்றோமே தவிர, இனவாதம் பேசவில்லை. சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்றும் கூறுகின்றோம். ஆனால் நாங்கள் எங்களுடய மக்களின் பிரச்சினைகளை பேசும் போது அது இனவாதமாக பார்க்கப்படுகின்றது. காணாமல் போனவர்களைள தேடும் போதும், யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் போதும் அது இனவாதமாக பார்க்கப்படுகின்றது. நாங்கள் 30 வருடங்கள் யுத்தத்தில் பல குண்டுவெடிப்புகளை கண்டுள்ளதுடன், உறவுகளையும் இழந்துள்ளோம். அதனை பேசும் போது இனவாதமாக பார்க்கப்படுகின்றது.
இந்த அரசாங்கம் எங்களை போன்று கஸ்டத்துடன் வந்ததே. துன்ப துயரங்களை நீங்கள் அறிவீர்கள். நீங்களும் அதே பிழையை தொடர்வதாக இருந்தால் எமது செயற்பாடுகளை நீங்களும் இனவாதமாக பார்ப்பீர்களாக இருந்தால் இந்த நாடு ஒருநாளும் ஒரு அடியேனும் முன்னால் செல்ல முடியாமல் இருக்கும் என்றார்.
![]()