இலங்கை

சிப்பாய்கள் என விளித்து இராணுவ வீரர்களை அவமதித்த ஜனாதிபதி – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

யுத்த பூமியில் நேரடியாகப் போராடியவர்களே இராணுவ வீரர்களாவர். ஆனால் அனைவரையும் சிப்பாய்கள் என விளித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை அவமதித்து விட்டார் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பிவிதுரு ஹெல உருமய தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலிப் பிரிவினைவாதிகள் கோபித்துக் கொள்வர் என்ற அச்சத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய போர் வீரர் நிகழ்வினை புறக்கணிப்பதற்கு திட்டமிட்டிருந்தார்.

எவ்வாறிருப்பினும் தேசப்பற்றாளர்களான நாட்டு மக்களின் எதிர்ப்பினையடுத்து விருப்பமின்றி ஜனாதிபதி அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய போது, இராணுவ வீரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு முயற்சித்தார். இது மணமகள் இன்றி திருமணத்தை நடத்துவதைப் போன்றதாகும்.

இராணுத்தினர் அனைவரும் சிப்பாய் என்ற போதிலும், அனைத்து சிப்பாய்களும் இராணுவ வீரர்கள் அல்ல. யுத்த பூமியில் நேரடியாகப் போராடியவர்களே இராணுவ வீரர்களாவர். யுத்தத்தின் போது யுத்த பூமிக்குச் சென்று போராடியவர்களே இராணுவ வீரர்களாவர். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சகலரையும் சிப்பாய்கள் என அழைத்து அவர்களை அவமதித்திருக்கின்றார்.

இராணுவத்தினரால் தான் யுத்தம் ஏற்பட்டது என்பதைப் போலவே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது. யுத்தத்தின் அபாயத்தை இராணுவத்தினருக்கு புதிதாகக் கற்பிக்க வேண்டியதில்லை. அமைதியின் மதிப்பை அறிந்ததால் தான் இராணுவ வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்து அதில் வெற்றி கண்டனர்.

ஆனால் புலி பயங்கரவாதிகளுக்கு அது தெரியாது. அமைதியின் மதிப்பையும், யுத்தத்தின் பேரழிவையும் அறிந்திருக்காததன் காரணமாகவே அவர்கள் யுத்தத்தை ஆரம்பித்தனர்.

இராணுவத்தினர் முன்னிலையில் ஆற்றிய உரையை ஜனாதிபதி பயங்கரவாதிகளின் முன்னிலையிலேயே ஆற்றியிருக்க வேண்டும்.என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *