ரணில் -சஜித் தரப்பு இணக்கம்!; தங்களுடன் இணையக் கூடிய ஏனைய கட்சிகளுடன் அடுத்து வரும் நாட்களில் பேசுவதற்கும் முடிவு

உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தியை விடவும் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றுள்ள சபைகளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர்களால் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 266 சபையில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றிபெற்ற போதும், அவற்றில் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 132 சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ள ஆசனங்களை விடவும் எதிர்க்கட்சிகள் பெற்றுள்ள ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை அதிகமாகவும் சில இடங்களில் சமமாகவும் உள்ளன.
இதனால் குறிப்பிட்ட சபைகளில் அறுதிப்பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தியினால் ஆட்சியமைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலைமையில், அந்த சபைகளில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து மேயர், பிரதி மேயர், தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோரை நியமித்து ஆட்சியமைப்பதற்கு திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த நாட்களாக எதிர்க்கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் கடந்த நாட்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் செயலாளர் தலதா அதுகோரல, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகயோரும் கலந்துகொண்டனர்.
இவ்வேளையில் எதிர்க்கட்சிகளால் ஆட்சியமைக்கக் கூடிய உள்ளூராட்சி சபைகளில் ஏனைய எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டணியாக ஆட்சியமைக்க இருதரப்புக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர்களால் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உள்ளூராட்சி சபைகளில் தங்களுடன் இணையக் கூடிய ஏனைய கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது.
![]()