இலங்கை

கொட்டியா – டயஸ்போரா எனக் கூச்சலிட்டு வெள்ளவத்தை நினைவேந்தலை குழப்ப முயன்ற சிறு குழு !

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற வேளை அதனை குழப்புவதற்கு சிறிய குழுவொன்று முயற்சிகளில் ஈடுபட்ட போதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

அப்பகுதியில் நேற்று காலை முதல் கடும் பொலிஸ் பாதுகாப்பு காணப்பட்ட போதிலும் சிறிய எண்ணிக்கையிலான குழுவினர் அந்த பகுதிக்கு வந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற பகுதியை நோக்கி செல்ல முயன்றனர். எனினும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேல் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை பார்த்து எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்.

இலங்கையில் இராணுவம் பயங்கரவாதிகள் மீதே தாக்குதலை மேற்கொண்டது, இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளுடனேயே போரிட்டது,இவர்கள் இங்கு நினைவேந்தலில் ஈடுபடுவது வெட்கமாக உள்ளது, இவர்கள் கள்ளப் புலிகள் என அவர்கள் தொடர்ந்து கோசம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

நினைவேந்தலில் ஈடுபட்டவர்கள் நிகழ்வு முடிவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை அவர்களை நோக்கி கொட்டியா, டயஸ்போரா என கோசமிட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.

இந்த நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை அலெக்ஸாண்டிரா வீதி கடற்கரை பகுதியில் நேற்றுக் காலை முதல் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த சில வருடங்கள் போன்று இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் இதனையும் மீறி பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்தனர்.

அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என சமூகத்தின் பல தரப்பட்டவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் செயற்படும் சுதந்திர பாலஸ்தீன அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டுநிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நினைவேந்தல் நினைவில் கவிதை வாசித்தல், உரைகள் போன்றவையும் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *