நான் உயிருடன் இல்லாத காலத்திலும் ஒற்றை சிங்கக் கொடியின் கீழ் நாடு இருக்க வேண்டும்

நான் உயிருடன் இல்லாத காலத்திலும், அனைத்து இலங்கையர்களின் தாய்நாடும் இறையாண்மை கொண்ட நாடாக ஒற்றை சிங்கக் கொடியின் கீழ் இருக்க வேண்டும் என்பதே எனது ஒரே பிரார்த்தனை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் பூர்த்தியடைவதையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விசேட அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரின் அறிக்கை வருமாறு,
எமது தாய்நாடு பிரிவினைவாத பயங்கரவாத பிடியில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒவ்வொரு அங்குள பகுதியும் மேன்மையான பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படியே செயற்படுகின்றது. சிங்க கொடியின் கீழ் அபிமானமிக்க ஒற்றையாட்சி நாட்டில் 2009 மே 19ஆம் திகதி மேன்மையான பாராளுமன்றத்தில் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் நான் நிகழ்த்திய வெற்றி தொடர்பான உரையை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்.
உலகில் பலமான நாடுகளே பயங்கரவதிகளுக்கு பயப்படுகையில், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதத்திற்கு எதிராக பதிலளிப்பதற்கு நான் தீர்மானித்தேன். நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை செய்யவில்லை. நாட்டில் தேவேந்திரமுனை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான சகல மக்களும் எமது மக்களே. அந்த வகையில் மக்களை பாதுகாக்கும் வகையிலேயே நாங்கள் யுத்தம் புரிந்தோம்.
படையினர் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானத்தை பாதுகாத்துக்கொண்டே போரிட்டனர். உலகில் முதலிடத்திலான மனிதாபிமான ரீதியிலான முப்படைகளின் தளபதியாக நான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து 16 வருடங்கள் கடக்கின்றன.
இந்நிலையில் அண்மையில் கனடாவில் ஈழத்தை நினைவுக்கூரும் தமிழ் இனபடுகொலை நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலமாகியுள்ள நிலையில், இப்போது பயங்கரவாதத்தின் நிழல் இன்னும் இருக்கின்றது என்பதனை அடையாளப்படுத்தும் விடயமாக இது இருக்கின்றது.
அவ்வேளையில் இலங்கை அரசாங்கத்தினால் ஆயிரக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரம்டன் நகர மேயரால் வெளியிடப்பட்ட கருத்தை அப்போதைய அரச தலைவர் மற்றும் படைகளின் தலைவர் என்ற ரீதியில் நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.
தமிழ் சிவிலியன்கள் விடுதலைப் புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கையில் தமிழ் சிவில் மக்கள் மனித குண்டுகளாக மாற்றப்பட்டிருந்த நேரத்தில் அவர்களை மீட்கும் மனிதாபிமான பணிகளிலேயே முப்படையினர் ஈடுபட்டனர். அன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தமிழ் மக்கள் மனசாட்சிக்கு இணங்க இதற்கு சாட்சியாக இருப்பர் என்று நம்புகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
![]()