கட்டுரைகள்

சொல்லித்தான் ஆகவேண்டும்!… அரசியல் பத்தித்தொடர்… 36 … தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

06.05.2025 உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முடிவுகள் குறித்த ஒரு நுண்ணாய்வு – வடக்கு கிழக்கு மாகாணங்களை முன்வைத்து

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் (60% வட்டார ரீதியான நேரடித் தெரிவும் 40% விகிதாசாரத் தெரிவும்) நடைமுறையின் கீழ் முதன்முதல் 2018 மார்ச் இல் தேர்தல் நடைபெற்று அவற்றின் ஆட்சிக்காலம் 2022 மார்ச் இல் முடிவுற்ற பின்னர் 2023 மார்ச் வரை ஓராண்டு காலம் நீடிக்கப்பட்டுப் பின் 2023 இல் வேட்பு மனுக்களும் கோரப்பட்டு ஏற்கப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு – அறிவிக்கப்பட்ட தேர்தல் திகதிகள் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுப் பின் அதுவும் இழுத்தடிக்கப்பட்டு இறுதியில் தேர்தல் நடைபெறாமலேயேபோய் பின்னர் 2024 நவம்பரில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் முன்பு 2023 இல் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் ரத்துச் செய்யப்பட்டு – கட்டுப்பணங்களும் மீளக் கையளிக்கப்பட்டு புதிய வேட்பு மனுக்கள் கோரப்பட்டுப் புதிய தேர்தல் 06.05.2025 இல் நடைபெற்று முடிந்துள்ளது.

கடந்த வருடம் நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் (தென்னிலங்கை போன்றே) வீசிய அனுரகுமாரதிசாநாயக்க அலை கணிசமான தமிழர்களின் வாக்குகளைத் தேசிய மக்கள் சக்திக் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்திருந்த நிலையில், இவ் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலின் முடிவுகள் வடக்கு கிழக்கில் எவ்வாறு அமையும் என்பதையிட்டு இறுதிவரை எதிர்வு கூறமுடியாமல்தான் இருந்தது.

ஆனால், இப்போது தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுடைய வாக்குகள் எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டன என்பது குறித்து ஒரு நுண்ணாய்வை வெளிப்படுத்துவதே இப்பத்தியின் இலக்காகும்.

இத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்பார்த்ததை விடவும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குப் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளனர். இதன் அர்த்தம் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று நாமகரணம் சூட்டிக் கொண்டுள்ள இக்கட்சிகளின்மீது தமிழர்கள் இப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதோ அல்லது உள்ளூராட்சி அதிகார சபை அதிகாரத்தில் அமர்ந்து இக்கட்சிகள் ஊழல் மோசடிகள் அற்ற அதிகார துஷ்பிரயோகங்கள் அற்ற நிர்வாகத்தின் மூலம் மக்களுக்கு உண்மையும் நேர்மையும் வெளிப்படைத் தன்மையுமுடையதான சேவைகளை வழங்கி உள்ளூர் மட்டத்தில் தமிழ் மக்களைச் சமூக பொருளாதார ரீதியாக இக்கட்சிகள் கைதூக்கிவிடும் வகையில் வினைத்திறன் படைத்தவை என்ற எதிர்பார்ப்பிலுமோ அல்ல.

வடக்கு கிழக்கில் உள்ளூர்மட்ட அதிகாரங்களை (இது மாகாண சபைக்கும் பொருந்தும்) எக்காரணம் கொண்டும் அது எத்தகைய முற்போக்கு முகத்தைக் கொண்டிருந்தாலும்கூட ஒரு தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைக் கட்சியிடம் (தேசிய மக்கள் சக்தியிடம்) ஒப்படைப்பதற்கு வடக்கு கிழக்குத் தமிழர்கள் முழுமையாக விரும்பவில்லை அல்லது அதற்குத் தயாரில்லையென்பதை உணர்வு பூர்வமாக எடுத்துச் சொல்வதற்கு வேறு மாற்றுவழியில்லாமல்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அவை கடந்த காலங்களில் எத்தனை அரசியல் தெப்பிராட்டியங்களைப் பண்ணியிருந்தாலும்கூட அவற்றைப் பொருட்படுத்தாமல் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியற் பயணத்தில் தவிர்க்க முடியாததும்கூட. இதைத் தவறென்றும் கூறமுடியாது.

ஆனால், இப் ‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகளோ இத்தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு ஏதோ தமிழீழம் கிடைத்த மாதிரி தம்பட்டம் அடிக்கின்றன. மக்களிடம் இருக்கும் அரசியல் தெளிவும் உணர்வும் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் இல்லையென்பதையே இது காட்டுகிறது.

இப் ‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகள் மட்டுமல்ல போலிக் (கிழக்கின் ஒற்றுமை+கிழக்கின் அபிவிருத்தி+கிழக்கின் தனித்துவம்) பேசும் கட்சிகள் என்று எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளுமே அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமலும் தம்மைச் சுய விமர்சனம் செய்வதைத் தவிர்த்துக்கொண்டும் இத்தேர்தல் முடிவுகள் குறித்த தமது கருத்துக்களை ‘யானை பார்த்த குருடர்கள்’ போலத் தமது வாசிக்கேற்றவாறும் மக்களை வஞ்சிக்கும் தம்முடைய சுயநல அரசியல் நோக்கங்களுக்கு ஏற்றவாறும் பொருள்கோடல்களை வெளிப்படுத்தி வருகின்றன.

இதனையிட்டுத் தமிழ் மக்கள் அரசியல் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்த இரு தரப்பினரும் நம்பிக்கைக்குரியவர்களல்ல.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் இக் கட்சிகளுக்கு வாக்களித்தமை தமது அரசியல் உணர்வினை வெளிப்படுத்த தமிழ் மக்களிடையே வேறு மாற்று வழி இல்லாததாலேயே என்பதற்குக் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபையை உதாரணமாகக்கொள்ள முடியும்.

திருக்கோவில் பிரதேச சபை 100% தமிழ் மக்களைக் கொண்டதாகும். இங்கு போட்டியிட்ட சுயேச்சைக் குழுவொன்று தமிழரசுக் கட்சியைத் தோற்கடித்து வெற்றியீட்டியுள்ளது. திருக்கோவில் பிரதேச சபை எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசத்தில் ஒரு மாற்று வழியை (மாற்று அரசியல் அணியை) அடையாளம் கண்டதால்தான் மக்கள் இச் சுயேச்சைக் குழுவை வெற்றியீட்டச் செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில் பிரதேச சபை போன்று வடமாகாணத்தில் சுயேச்சைக் குழு எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

இத்தகைய ஒரு மாற்று அரசியல் அணியொன்று எதிர்காலத்தில் கிழக்கு மாகாண மட்டத்திலும் வடக்கு மாகாண மட்டத்திலும் தனித்தனியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் தற்போது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் மக்களை ஏமாற்றும் தமிழ்க் கட்சிகளே மலிந்துள்ளன. இவை யாவும் எதிர்காலத்தில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படும் வகையில் புதிய மாற்று அரசியல் அணியொன்று மேற்கிளம்புவது அவசியம்.

அதே வேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே வீசிய அனுரகுமாரதிசாநாயக்க அலை இன்னும் ஓயவில்லை என்பதையும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலின் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. ஆனாலும் அலை சற்று ஐதாகத்தான் அடித்துள்ளது. ஒப்பீட்டளவில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் ஏனைய தென்னிலங்கைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி-மக்கள் முன்னணி (PA)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு-பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு வடக்கு கிழக்கு தமிழர்கள் வாக்களித்ததை விட எண்ணிக்கை அடிப்படையில் இந்த உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் இன்னொரு தென்னிலங்கைக் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு கணிசமான அளவு கூடுதலாக வழங்கியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்மீது தமிழ் மக்கள் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்களென்பதையே இது காட்டுகிறது.

இதற்குக் காரணம் தேசிய மக்கள் சக்தி இன பிரச்சனைக்கான திருப்தியான தீர்வை உத்தேச புதிய அரசியலமைப்பு மூலம் வழங்குமென்ற நம்பிக்கையினாலோ அல்லது குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தைத்தானும் முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்யும் என்ற எதிர்பார்ப்பினாலோ அல்ல.

அதற்கான பிரதான காரணங்களை பின்வருமாறு பட்டியலிடலாம். *தற்போது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகளின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பும் விரக்தியும்.

*தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயகாவின் மீதுள்ள அபிமானமும் வசீகரமும்.

*நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஊழல் மோசடிகளற்ற-அதிகார துஷ்பிரயோகங்களற்ற-வீண்விரயமற்ற-இனவாத முகமற்ற அரச நிர்வாகத்தினால் விளையும் என எதிர்பார்க்கக் கூடிய நாடளாவிய நன்மைகள் நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசிந்ததுபோல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் சுவறும் என்ற நம்பிக்கை-எதிர்பார்ப்பு.

* வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயல்படுகின்ற இடதுசாரித்துவ ஈர்ப்புக் கொண்ட சக்திகள் மேற்கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான பிரச்சாரம்.

*மேற்கூறப்பட்ட பிரதான காரணங்களால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த வாக்காளர்கள் அமைதியாக அக்கடமையை நிறைவேற்றினார்களே தவிர தமிழ்த் தேசியக் கட்சிகளையோ அல்லது கிழக்கின் தனித்துவக் கட்சிகளையோ எதிர்த்துத் தீவிரமான பிரச்சாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க விரும்பாமல் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் வாக்களித்த தமிழர்கள்கூட அதாவது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்கள்கூட தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்ட வேண்டுமென்றே விரும்பியிருந்தனர்.

ஆனால், இக் காரணங்களின்-நிலைமைகளின் ஆயுட்காலம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் அல்லது நிரந்தரமாய் இருக்கும் என்பதும் கேள்விக்குறியுடனானதொரு விடயம்தான்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் (போலித்) தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் (போலிக்) கிழக்கின் தனித்துவக் கட்சிகளுக்கும் தமிழ் வாக்காளர்கள் ‘சிவப்பு’ விளக்குச் சமிக்ஞையையும் தேசிய மக்கள் சக்திக்குப் ‘பச்சை’ விளக்குச் சமிக்ஞையையும் காட்டினார்கள்.
ஆனால், நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் முன் எச்சரிக்கையாக ‘மஞ்சள்’ விளக்குச் சமிக்ஞைகளையே இம் மூன்று தரப்பினருக்கும் காட்டியுள்ளார்கள்.

இந்த ‘மஞ்சள்’ விளக்குச் சமிக்ஞைகள் எதிர்காலத்தில் ‘பச்சை’யாக மாறவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கட்சிகளும் கிழக்கின் தனித்துவக் கட்சிகளும் தமது எதிர்கால அரசியல் செல்நெறியை உண்மையாகவும்-நேர்மையாகவும்-வெளிப்படைத் தன்மையுடனும்-சுயலாபத்தைத் துறந்து முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்ததாயும் தகவமைத்துக் கொள்ளல் அவசியம். அதாவது இவர்கள் தமது சுயலாப அரசியலை-மக்களை ஏமாற்றும் அரசியலைக் கைவிடவேண்டும்.

அதுபோலவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வடக்கு கிழக்குத் தமிழர்களுடைய மனதை வென்றெடுக்கும் வகையில் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் அரசியல் தீர்வுச் செயற்பாடுகளையும் குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்யும் வகையிலான அரசியல் மற்றும் நிர்வாக செயற்பாடுகளையும் சமகாலத்தில் சமாந்தரமாக இதய சுத்தியோடு மேற்கொள்ளல் அவசியம். வெறுமனே வாக்குறுதிகளும் வார்த்தை ஜாலங்களும் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தாது.

இல்லையேல் இம்முறை கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபையில் சுயேச்சைக் குழுவொன்றிற்குக் காட்டப்பட்ட பச்சை விளக்கு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அவ்வாறானதொரு புதிய மாற்று அரசியலுக்கே கிழக்கு மாகாணத்திலும் வடக்கு மாகாணத்திலும் காட்டப்படும். அதுவே காலத்தின் தேவையும் ஆக இருக்கும்.

மேலும் தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த கால நடத்தைகள் குறித்து அதிருப்தி கொண்டவர்களும் அதேவேளை தென்னிலங்கைக் கட்சியொன்றிற்கு (தேசிய மக்கள் சக்திக்கு) வாக்களிக்க விரும்பாதவர்களும் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமலே இருந்துள்ளனர். எவருக்கு வாக்களித்தாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை என்ற அவநம்பிக்கையும் சலிப்பும்தான் அதற்குக் காரணம். வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களில் சராசரியாக 40 வீதமானவர்கள் வாக்களிக்கவில்லை.

ஆக, தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியலும்-அபிவிருத்தி அரசியலும் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் செல்ல வேண்டியதொரு புதிய முறைமை மாற்றத்தை வேண்டிநிற்கிறது என்பதை இந்த உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் மிகவும் நுணுக்கமாக உணர்த்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாக நோக்கினால் வடக்கு கிழக்குத் தமிழர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகள்-கிழக்குத் தனித்துவக் கட்சிகள்-ஆட்சியதிகாரத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி என எல்லோருக்குமே இத்தேர்தலில் ‘எச்சரிக்கை மணி’ அடித்துக் காட்டியுள்ளனர். இதில் இக்கட்சிகள் பெருமைபட்டுக்கொள்ள எதுவுமில்லை.

இதனைப் புரிந்து கொள்ளாமல் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்கிற மாதிரி கதையளப்பார்களாயின், வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களின் எதிர்காலம் மட்டுமல்ல முழு நாட்டினது எதிர்காலமும் ‘பழைய குருடி கதவை திறடி’ கதையில்தான் போய் முடியும். முறைமை மாற்றம் என்பது எட்டாக்கனியாகிவிடும் நிலைதான் வந்துசேரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *