இலங்கை

யாழில் வித்தியா படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம்; பொலிஸார் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் பதற்றம்

யாழ்ப்பாணம் – வேலணை சந்தியில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு  10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

குறித்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றையதினம் வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தினை சமூமட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன.

இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, “பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்க துறையே கவனம் செலுத்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மௌனத்தை கலைப்போம்,

பாலியல் வன் கொடுமைக்கு நீதி வேண்டும், பெண்களை இழிவுபடுத்தாத ஊடகங்கள் வேண்டும், ஊடகங்களே பாலியல் வன்கொடுமைகளை பாதுகாக்காதே, பாலியல் சுரண்டல்களின் கதவுகளை மூடுவோம், உரிமையின் எல்லைகளை திறப்போம், பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என கோஷமிட்டு, பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயக ரீதியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பொலிஸார் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கேட்டு பதிவுசெய்வதற்கு பொலிஸார் முனைந்தனர்.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது படங்களை வேண்டுமானால் எடுக்குமாறும், பெயர்களை கூற முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியதுடன், இது எமக்கு மாத்திரமல்ல, உங்களது வீட்டில் உள்ள பெண்களுக்கும் தான் ஏற்படும் பிரச்சினை, எனவே இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதால் பொலிஸார் ஓரமாக சென்றதாக தெரியவருகின்றது.

 

Loading

One Comment

  1. 10 ஆண்களாகியும் பங்குடுதீவு மாணவி விதஇதியாவின் பாலியல் வன்முறை கொலைக்கு இன்னும் தீர்வு தீர்க்கப்படவில்லையெனில் அது நீதித்துறையின் பலவீனமா அசட்டையீனமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *