ஸ்ரீலங்கன் ஏயர் லைன்சை உடனடியாக தனியார் மயமாக்குமாறு ஐ.எம்.எப்.கடும் நிபந்தனை; அரசுக்கு புதிய நெருக்கடி

சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக மின் கட்டணத்தை அதிகரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடனடியாக தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையையும் விதித்திருப்பதால் அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் மீது வலுவான அழுத்தத்தை சர்வதேச நாணய நிதியம் முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, இலங்கைக்கு நான்காவது தவணை வழங்குவதையும் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் அந்த தவணையை வெளியிடுவதற்காக மின்சார கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை திருத்துவது போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடனடியாக தனியார்மயமாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இப்போது அரசாங்கத்திற்கு மற்றொரு கடுமையான நிபந்தனையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல முந்தைய அரசாங்கங்கள் அதிக நட்டத்தில் இயங்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தனியார்மயமாக்க முயற்சித்தன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தனியார்மயமாக்குவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் இதை ஒரு தேசிய சொத்தாகக் கருதி, அதை இலாபகரமான நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்தது.
எனினும் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை தனியார்மயமாக்க ஒப்புக்கொண்டதாகவும் அடுத்த சில நாட்களுக்குள் இது தொடர்பாக அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
![]()