இலங்கை

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன்; அவரே தெரிவித்ததாகத் தகவல்

எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் களமிறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் சுமந்திரன், முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரிந்து நின்று தேர்தலை எதிர்கொள்வோம், மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை ஐக்கியமாக எதிர் கொள்வோம்” என்ற தமது முன்னைய நிலைப்பாட்டை சுமந்திரன் இந்தக் கலந்துரையாடலில் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, இனி வரக்கூடிய மாகாண சபைத் தேர்தலை பொது அணியில் நின்று எதிர்கொள்வதற்கான அடித்தளம் குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட தாகத் தெரிகிறது.

அதாவது தலைவர்கள் மட்டத்தில் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக – புது மெருகுடன் – இயங்குவதற்கான பூர்வாங்க இணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

அதற்கு மேலும் முதலமைச்சர் விடயம் பேசப்பட்டதாக கூட்டத்தில் பங்கு பற்றிய ஒரு தலைவர் தெரிவித்தார்.

வரும் மாகாண சபை தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிறிதரன் மாகாண முதல்வர் வேட்பாளராக நிற்பார் என்று தாம் அறிவித்தபோது, அடுத்த நாள் பேட்டியளித்த சிறிதரன் தமக்கு அந்த எண்ணம் இல்லை என்று பகிரங்கப்படுத்தி இருக்கின்றார் என இந்தச் சந்திப்பில் சுமந்திரன் சுட்டிக்காட்டினாராம்.

அந்தக் காரணத்தின் பின்புலத்தில் தாமே வரும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் என சுமந்திரன் இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டபோது ‘அது எங்களுக்குத் தெரியும்’ என்ற சாரப்பட சித்தார்த்தனும் செல்வமும் பதிலளித்தனர் எனக் கூறப்பட்டது.

இதன்மூலம் குறித்த கலந்துரையாடல் புதிதாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடித்தளம் போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *