உலகம்

ஆபரேஷன் சிந்தூரில் 100இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி  ( 11) மாலை ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கையாகும். இதன்மூலம், பயங்கரவாதச் செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் அங்கிருந்த சுமார் 100இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

“இந்திய தேசம் பயங்கரவாதச் செயல்களை சகித்துக்கொள்ளாது என்பதையே மீண்டுமொருமுறை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியாவிலுள்ள வெவ்வேறு உளவுப் பிரிவுகளின் உதவியால் தீவிர ஆய்வுக்குப் பின், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் இருக்கும் பல இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், 9 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பயங்கரவாதிகள் முகாம்கள் அமைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்திருந்தன. இவற்றை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம்.

மே 7 முதல் 10 வரையிலான காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சண்டையில் பாகிஸ்தான் இராணுவத்தில் 35 – 40 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

மே 8 – 9 இரவில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ட்ரோன்களையும் போர் விமானங்களையும் ஏவியது.

மே 9 – 10 இரவில், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் இந்திய வான்வெளிக்குள் ஊடுருவும் முயற்சி இந்திய விமானப் படை மற்றும் இராணுவத்தின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இந்திய இராணுவ தளங்களைக் குறிவைத்து அவர்கள் மேற்கொண்ட நகர்வுகள் தோல்வியைச் சந்தித்துள்ளன”.

“இதனிடையே, பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை 3.35 மணிக்கு நடைபெற்றது. அதில் போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே 10 மாலை 5 மணியிலிருந்து போர் முடிவுக்கு வருவதாக உடன்பாடு எட்டப்பட்டு அறிவிக்கப்பட்டது” என்றார்.

புல்வாமா தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ. என். பிரமோத் ஆகியோர் அடுத்தக்கட்டமாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *