இலங்கை

கசிப்புக்காக வாக்களிக்கும் இனமல்ல தமிழர்கள்; அமைச்சர் பிமலை சாடும் சுமந்திரன் 

கசிப்பும் பணமும் கொடுத்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்து என்பதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும் என

வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் என்று இதுவரை காலமும் பிழையான எண்ணத்தை அவர் கொண்டுள்ளார் என்றும் சாடியுள்ளார்.

பாராளுமன்றத்தில் கடும் ஆவேசத்துடன் பேசிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சி கசிப்பும் பணமும் வழங்கி தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்றதாக குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்;

அமைச்சர் பிமல் ரத்நாயக்காவுக்கு தெரியவில்லை. இலங்கை தமிழ் அரசுக் கட்சி சாத்வீகக் கட்சி மாத்திரமில்லை – சமூக அக்கறையுள்ள கட்சியுமாகும். 75 ஆண்டுகளுக்கு மேலான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வரலாற்றை அமைச்சர் பிமல் ரத்நாயக்க எடுத்துப் பார்க்க வேண்டும்.

மது ஒழிப்புக்கான இலக்கை கொண்டுள்ளதுடன் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.அதனால்தான் மதுபான சாலைகளை புதிதாக அமைப்பதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதுடன் நீதிமன்றங்கள் ஊடாக அவற்றை தடுக்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது.

முன்னைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியல் சலுகையாக வழங்கியிருந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான சிபார்சினை வழங்கியிருந்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவோம் என ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவான மூன்றாம் நாள் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்னும் அதனை வெளியிடவில்லை. யார் மீதான பயத்தினால் ஆறு மாதங்கள் கடந்தும் அதனை அவர் வெளியிடவில்லை.

எனவே தேசிய மக்கள் சக்தி மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை சகிக்க முடியாமல் அவர்களது உணர்வுகளை அவமதித்து பிழையான சாட்டுதல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ள கருத்து அவரது அரசின் சிறுமையை வெளிப்படுத்துகிறது.

எனவே தமிழரசுக் கட்சி மீதான இந்தக் குற்றச்சாட்டை பாராளுமன்றுக்கு வெளியில் ஆதாரங்களுடன் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படுத்த வேண்டும்.

அத்தோடு சலுகைகளுக்காகவும் கைமாறுக்காகவும் விலை போனவர்கள் தமிழர்கள் என்று இதுநாள் வரை அவர் கொண்டுள்ள எண்ணம் மிகத் தவறானது – சிறுமையை வெளிப்படுத்துகிறது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *