இலங்கை

2024 செப்.21 முதல் 2025 மே 7 வரை 79 துப்பாக்கிச் சூட்டில் 52 பேர் உயிரிழப்பு

2024 செப்டம்பர் 21 முதல் 2025 மே 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 79 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இவற்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 260 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் அவர்களை உருவாக்கியவர்கள் தொடர்பில் அனைவரும் நன்கு அறிவார்கள். எவ்வாறாயினும் பாதாள குழுக்களின் செயற்பாட்டை இல்லாதொழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது. அந்த வகையில் 2024.09.21 முதல் 2025.05.-7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 79 துப்பாக்கிப் பிரயோகத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். திட்டமிட்ட பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாளகுழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே துப்பாக்கிசூட்டு பிரயோகம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.ஏனெனில் கடந்த காலங்களில் இதனை காட்டிலும் பல படுகொலைகள் இடம்பெற்றன.

இராணுவத்தில் இருந்து இடைவிலகியவர்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டு ள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி,: சர்வஜன சக்தி, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் 34 பேர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடான குற்றச்செயல்களுடன் தொடர்புக்கொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவர்கள் நடந்து முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.

எவ்வாறாயினும், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாள குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிய சட்டங்கள் வெகுவிரைவில் இயற்றப்படும். அதேபோன்று புதிய விசாரணை பிரிவுகள் சகல மாவட்டங்களிலும் நிறுவப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *