உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் சொல்லியுள்ள செய்தி என்ன?… நியூசிலாந்து சிற்சபேசன்

உள்ளூராட்சித் தேர்தலில், வெளிப்படையாகத் தெரியக்கூடிய வெற்றியே, தமிழ்க்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கின்றது.
2024 நவம்பரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே, வெளிப்படையாகத் தெரியக்கூடிய தோல்வியே தமிழ்க்கட்சிகளுக்குக் கிடைத்தது. இழந்த ஆசனங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, எதிர்கொண்ட வசவுகளின் எண்ணிக்கையும் கணிசமானதாகும்.
ஆறுமாதங்களிலே மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான காரணங்களைத் தேடி அலையவேண்டியதில்லை. எங்கெங்கு காணினும் சிந்திச் சிதறிக் கிடக்கின்றன.
பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ்க்கட்சிகள் தனியன்களாகவே போட்டியிட்டன. அதனால் வாக்குகள் சிதறின. மாறாக, உள்ளூராட்சித் தேர்தலிலே ஓரளவேனும் அணிதிரண்டிருந்தன. அத்துடன், ஒரு பிரதான எதிரியைக் காண்பித்து “பூச்சாண்டி” காட்டினால் தமிழ் வாக்காளர்களை வளைக்க முடியும் என்னும் தந்திரோபாயத்தையும் பயன்படுத்திக்கொண்டன.
அதற்கப்பால், தமிழ்க்கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும் என்னும் குரல் சிவில் சமூகத்திடமிருந்தும் வெளிப்பட்டது. கூடவே, இளைப்பாறிய அரச அதிகாரிகள் உள்ளிட்ட சமூகத்தின் மதிப்பார்ந்தவர்களும் தேர்தல்களத்தில் இறங்கி வேலைசெய்தனர். கட்சி அடையாளத்துக்கு அப்பால், உள்ளூர்வாசியொருவரை ஆதரிப்பதிலே சங்கடமிருக்கவில்லை. அதனால், வீதியில் இறங்கிப் பிரச்சாரத்தில் தோள்கொடுத்தனர்.
மறுவளத்தில், தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட சங்கடங்களும் தமிழ்க்கட்சிகளுக்குச் சாதகமாகின.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற பேச்சும், சபைநாகரீகமற்ற நடத்தையும், கண்ணியமற்ற முகபாவனைகளும் சாதாரணமானவர்களை முகம்சுளிக்கவைத்தன.
யாழ்ப்பாணத்திலேயே பிறந்து – வளர்ந்து – வாழ்பவர்களுக்கே, ஏழாலைக்குள்ளே யாழ்ப்பாணம் இருப்பதான தகவலைக் கேள்விப்பட்டபோது திக்கித்துப்போனார்கள். “நாங்கள் வெளிக்கிட்ட பிறகு யாழ்ப்பாணத்தை ஏழாலைக்குள்ளே கொண்டுபோய் வைத்துவிட்டார்களோ” என புலம்பெயர்ந்தவர்கள் பதறிவிட்டனர். நல்லவேளையாக, யாழ்ப்பாணத்தை ஏழாலையிலிருந்து மீட்பதற்கான கண்டனப்பேரணிகளை ஆரம்பிக்கவில்லை.
யாழ்ப்பாணம் கச்சேரி பாரம்பரியமான பெருமை கொண்டதாகும். கச்சேரிக் கட்டடத்தொகுதியின் தூண்கள்கூட வரலாற்றின் சாட்சியாகும். மிகப்பெரிய ஆளுமைகள் உலாவிய இடமாகும். அத்தகைய பெருமைமிக்க கட்டடத்தொகுதியிலே, மாவட்டமொன்றின் உச்சமான சபை எனச் சொல்லக்கூடிய, ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறுகின்றது. அந்தக்கூட்டத்தைத் தலைமைதாங்கிய, கௌரவமான என்று சொல்லப்படவேண்டிய, அமைச்சர் பெருமகன், அந்தக்கூட்டத்திலே பிரசன்னமாகியிருந்த, கௌரவமான என்று சொல்லப்படவேண்டிய, உறுப்பினரொருவரை “டேய்” என விழித்தபோது அந்தக்கட்டிடமே கூனிக்குறுகியது.
தேசிய மக்கள் சக்தியின் மறைகரமான ஜேவிபியின் முக்கியஸ்தர்களின் இனப்பிரச்சினை
தொடர்பான பிரசங்கங்கள் தமிழ் வாக்காளர்களைப் பீதிக்கு ஆட்படுத்துகின்றன.
விட்டகுறை தொட்டகுறையாக, உப்பின் சுவையா? பெயரா? முக்கியமென மூத்த அமைச்சரொருவரின் கேலிப்பேச்சு “பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த” கதையாகியது.
இவ்வாறான பல்வேறு காரணிகளின் கூட்டுக்கலவையான சூழலிலேயே, உள்ளூராட்சித் தேர்தலைத் தமிழ்வாக்காளர்கள் எதிர்கொண்டனர். அதனுடைய அறுவடையைத் தமிழ்க்கட்சிகள் பெற்றுக்கொண்டன.
எப்படிப்பார்த்தாலும், ஒவ்வொருதேர்தலிலும் ஒரேசெய்தியையே தமிழ் வாக்காளர்கள் சொல்கின்றனர். அதனைத் தமிழ்க்கட்சிகள் பொருட்படுத்துவதில்லை. மாறாக, தமிழ்மக்களைப் “பேய்க்காட்டுவதிலேயே” கவனத்தைக் கொண்டிருக்கின்றன.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவு வெளியாகத் தொடங்கியபோதே, வெற்றிக்கான உழைப்பு யாருடையது என்பதிலே கட்சிக்காரர்களிடையே “பிடுங்குப்பாடு” தொடங்கிவிட்டது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கைங்கரியத்தை சோஷல் மீடியாவும் கனகச்சிதமாகச் செய்கின்றது.
நிற்க, உள்ளூராட்சித் தேர்தல் வெற்றிக்கு அப்பால் தமிழ்க்கட்சிகளின் போக்கு கேள்விக்கு உட்படுத்தவேண்டியதாகும். அதுவே காலத்தின் கட்டாயமாகும்.
தேர்தலொன்றிலே வெற்றி பெறுவதற்காக எதையாவது பேசிவிடுகின்றனர்.
உள்ளூராட்சித் தேர்தல் காலங்களிலே உணர்ச்சியைக் கிளறுகின்ற தொனியைக் காணமுடிந்தது.
காணிசுவீகரிப்புத் தொடர்பாக வெளியாகிய வர்த்தமானி அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படுமானால், அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என ஒரு அரசியல் பிரமுகர் எச்சரித்தார்.
சனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் காலடிவைக்க விடமாட்டோம் என மற்றுமொரு அரசியல் பிரமுகர் முழங்கினார்.
இவ்வாறான “உசுப்பேத்தல்” அரசியல் தலைதூக்க எத்தனிக்கின்றதோ என்னும் கிலேசம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
யுத்தத்தை வழிநடாத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்குக் கேட்டார்கள். வடக்கில் ஆயிரம் விகாரை நிர்மாணத் திட்டத்தின் நாயகன் சஜித் பிரேமதாசவுக்கும் வாக்குக் கேட்டார்கள்.
அதன்பின்னர், தமிழ்க்கட்சிக்கே தமிழ் மக்களுடைய வாக்கு வேண்டும் என்று உரத்துச் சொன்னார்கள். தேசமாகத் திரளுங்கள் என முழங்கினார்கள்.
முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்தன என்னும் கேள்விக்குப் பதில் பூஜ்யம் மட்டுமேயாகும்.
சிங்கக்கொடியைத் தூக்கினார்கள். சுதந்திரதினவிழாவில் கலந்துகொண்டனர்.
ஆளுக்கொருகட்சியை உருவாக்கிக் கொண்டனர். எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுகின்ற பாணியை உருவாக்கினர். “ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து” என்ற கதையாக கட்சிகளையே நீதிமன்றத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.
இவற்றையே, கடந்த பதினாறு ஆண்டுகளிலே, தமிழ்க்கட்சிகளின் சாதனைகளாகச் சொல்லலாம்.
இத்தகையை நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கவேண்டும்.
யுத்தகாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவில்லை. புதிதுபுதிதாகக் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. எல்லைப்புறக் கிராமங்கள் தொடர்ச்சியாகப் பறிபோகின்றன. காணாமல் ஆக்கப்படவர்கள் முதல் யுத்தக்குற்றங்கள் வரை அனைத்துவிடயங்களுமே காணாமல் ஆக்கப்படுகின்றன.
தமிழ்மக்களுடைய அடிப்படை இருப்பு கேள்விக்கு உள்ளாகின்றது. அதனால், அரசியல்ரீதியான குரலின் வலிமையே காலத்தின் தேவையாகும்.
உள்ளூராட்சித் தேர்தலிலே வெற்றி என்பது குறியீடு மட்டுமேயாகும். உள்ளூராட்சி சபைகளின் அதிகாரவரம்புக்கு தையிட்டி விகாரை நல்லதொரு உதாரணமாகும்.
ஆகையால், உள்ளூராட்சித் தேர்தல் வெற்றியில் மிதமிஞ்சிய மயக்கம் தேவையற்றது.
மாறாக, தமிழ் மக்களுடைய குரலை அரசியல்ரீதியாக வலிமைப்படுத்தவேண்டும்.
அதற்கான ஆணையையே, உள்ளூராட்சித் தேர்தலிலே, தமிழ்மக்கள் வழங்கியுள்ளனர்.
![]()