இலங்கை

மட்டக்களப்பில் தமிழரசு வென்ற இரு சபைகளில் பிள்ளையான் தரப்புடன் இணைந்து ஆட்சியமைக்க தே.ம.ச. இரகசிய பேச்சு!

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியனின் கோட்டையான மண்முனை தென் ஏருவில்பற்று மற்றும் போரதீவு பற்று பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற இரகசிய பேச்சில் ஈடுபட்டு வருவதாக அரசியல்வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தாலும் பல சபைகளின் ஆட்சியை அமைக்க போதிய ஆசனங்கள் இல்லாதனால் ஏனைய கட்சிகளை தம்வசம் இழுக்க வேண்டிய பாரிய சவால்களை எதிர் நோக்கியுள்ளனர்.

இதனடிப்படையில் தமிழரசுக் கட்சியின் சாணக்கியனின் கோட்டையான மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையில் 11 வட்டாரங்களில் 11 உறுப்பினர்களும் 9 போனஸ் ஆசனங்களுடன் 20 பேரை தெரிவு செய்வதற்காக நடந்த தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி 8 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2 ஆசனங்களையும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும்,ஜக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும், ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு ஒரு ஆசனத்தையும், ரிவி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்த பிரதேச சபையின் ஆட்சியை அமைக்க 11 ஆசனங்கள் தேவை. ஆனால் தமிழரசுக் கட்சி ஆட்சியை அமைக்க 3 ஆசனங்களே தேவை. எனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சிமற்றும் சங்கு சின்னத்துடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை. எனவே ஜ.ம.சக்தி, ரிவி சின்ன சுயேச்சை குழு, ஊசி சின்ன சுயேச்சைக் குழு ஆதரவு வழங்கினால் மட்டுமே தமிழரசால் ஆட்சியை அமைக்க முடியும்.

ஊசி சின்னத்தில் சுயேச்சைக் குழுவில் தெரிவு செய்யப்பட்ட வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அந்த பகுதியில் குளத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து நிதி வீண் விரயம் செய்ததாக சி.ஜ.டி.யிடம் முறைப்பாடு தெரிவித்து சர்ச்சை இடம்பெற்றுள்ள நிலையில் அவர் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கமாட்டார் என்பதால் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேநேரம் போரதீவுப்பற்று பிரதேச சபையில் 16 ஆசனங்களுக்கு தேர்தல் நடந்தது.இதில் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்கள் உட்பட 16 ஆசனங்களைப் பெற்றுள்ளன.இதில் ஆட்சியமைக்க 9 ஆசனங்கள் தேவை.

எனவே தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தியுடனோ அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியடனோ இணைந்து ஆட்சியமைக்க மாட்டார்கள். எனவே இவ்வாறான திரிசங்கு நிலையில் சாணக்கியனின் கோட்டையான மண்முனை தென் எருவில்பற்று மற்றும் போரதீவு பற்று பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

அதேவேளை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அமைப்பற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஊசி சின்ன சுயேச்சைக் குழு, ரிவி சின்ன சுயேச்சைக்குழு, சங்கு சின்னத்துடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அவ்வாறே போரதீவுப்பற்று பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் ஒரு ஆசனம் தேவை எனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அட்சி அமைக்க மாட்டார்கள் ஆகவே தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்தால் மட்டும் ஆட்சி அமைக்க முடியும். எனவே இந்த சபையை ஆட்சி அமைக்க தமிழரசு கட்சி யாருடன் இணைந்து ஆட்சி அமைப்பது என திரிசங்கு நிலையில் உள்ளதுடன் தேசி மக்கள் சக்தி தமிழரசு கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது?

எனவே சாணக்கியணின் கோட்டையான இரு சபைகளிலும் எவ்வாறு தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கப் போகின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *