உலகம்

இந்திய இராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே என்கிறது பாகிஸ்தான்

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இந்தப் போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும் உரிமை உண்டு’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் ஆயுதங்களை நிலைநிறுத்தி, சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள மக்களை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயலாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பிரிவு 51 மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, தேவையான நேரத்தில் திருப்பித் தாக்கும் உரிமை என்பது பாகிஸ்தானுக்கும் உண்டு. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம்’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு பாகிஸ்தான் தனியாக அறிவித்தல் அனுப்பி இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அத்துடன், இந்தத் தாக்குதல் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே வெடிகுண்டுகள் வீசி பாகிஸ்தான் இராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இந்தியக் குடிமக்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் சிந்தூர் – முன்னதாக, ‘இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை. அத்துமீறல் இல்லாதவை.

இந்தத் தாக்குதலில் எந்த பாகிஸ்தானிய இராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைபிடித்துள்ளது. 25 இந்தியர்களும், ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *