இலங்கை

அரசின் வடக்கு காணி ஆக்கிரமிப்பு; ஐ. நா. பிரதிநிதியைச் சந்திக்க முடிவு; தூதுவர்களையும் சந்திக்கவுள்ள தமிழ் தேசிய பேரவை

வடக்கு மாகாண கரையோர பகுதியில் காணி சுவீகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிடில் அதற்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்துவோம் என தமிழ் தேசிய பேரவை எச்சரித்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழ் தேசிய பேரவையின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அவர் இங்கு மேலும் கூறுகையில்,

யுத்த காலத்தில் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலையை விட மிக மோசமான செயலை இந்த வர்த்தமானியை வெளியிட்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் செய்யும்.குறித்த வர்த்தமானியின் பிரகாரம் குறித்த காணி தங்களுக்குரியது என்பதை மக்கள் நிரூபிப்பதற்கு உரிய கால அவகாசம் என்பது போதுமானதாக இல்லை. பலருக்கும் குறித்த வர்த்தமானி தொடர்பில் தெரியவில்லை.

தனியார் காணிகளாக இருந்தாலும் அவை நிரூபிக்கப்படாத பட்சத்தில் அரச காணிகளாக மாறும். நாட்டில் ஏற்பட்ட ஆயுதப் போராட்டம் காரணமாக பலரும் நாட்டை தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் தற்போது வாழ்வதற்கு சமமான சனத்தொகை மேற்கு நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ அனைவரும் சட்டவிரோதமான முறையிலேயே நாட்டை விட்டுச் சென்றார்கள். அவர்கள் சொத்துக்கள் ஆவணங்களை கொண்டு சென்றதாக இல்லை.

இந்தக் காணிகள் உரிமை தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் நிரூபிப்பது என்பது மிகவும் சாத்தியம் குறைந்தது. குறித்த வர்த்தமானியை அரசாங்கம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பான அனைத்து நடவடிக்கைககளும் கைவிடப்பட வேண்டும். இல்லாவிடில் அதற்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்துவோம்.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக தமிழ் தேசிய பேரவையின் பங்காளி கட்சித் தலைவர்களுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியை அவசரமாக சந்தித்து கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் தீர்மானத்தை எடுக்கும் பிரதான நாடான பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதர்களை சந்தித்து இது தொடர்பில் முறையிடவுள்ளோம்.

விசேடமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவில் உள்ள நிலையில் இந்தியத் தூதரையும் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளோம் – என்றார்.

இந்த ஊடகச் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், செல்வராஜா கஜேந்திரன், நல்லதம்பி சிறீகாந்தா, முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *