இங்குள்ளவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழரின் காணிகளுக்கும் ஆபத்து; வடக்கில் அரசு ஆக்கிரமிக்கப் போகும் 5940 ஏக்கர் காணிகள்

புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றும் காணிகளின் உறுதிகளில்லாத தமிழர்களின் வடக்கு மாகாணத்திலுள்ள காணிகளை ஆக்கிரமிக்கும் பாரிய திட்டமொன்றை அரசு ஆரம்பித்துள்ளது.இதற்கமைய வட மாகாணத்தில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை அரசு ஆக்கிரமிக்கப்போகின்றது.இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத்தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஜனாதிபதி சட்டத்தரணி இது தொடர்பில் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களுக்கும் அவசர கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளைக்கபளீகரம் செய்யும் விதத்தில்அரசு விடுத்துள்ள வர்த்தமானிஅறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம்28ஆம் திகதி வரை காலக்
கெடு விதித்திருக்கும் சுமந்திரன்,அரசு இந்த விடயத்தில்
வர்த்தமானியை வாபஸ் பெறத் தவறுமானால் 28 ஆம் திகதிக்கு பின்னர் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக சாத்வீக வழிமுறையில் சட்ட மறுப்புப்போராட்டம் ஒன்று ஆரம்பம் ஆகும் என்றும் எச்சரித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை கையகப்படுத்த அரசு வர்த்தமானி யூடாக எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை
வெற்றிலைக்கேணியில் உள்ள பொது மண்டபத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்து அவசர கோரிக்கை விடுத்து ,அரசியும் எச்சரித்துள்ள சுமந்திரன் மேலும் கூறுகையில்,
ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதிகளாக இருக்கும் போது அவர்களது காணிகளை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல் அதை நாங்கள் அனுமதிக்க முடியாது
இந்த காணி நிர்ணய கட்டளைச் சட்டம் என்பது இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1931 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதிலே யாரும் பயன்படுத்தாத தரிசு நிலக் காணிகள் அரச காணிகள் என சொல்லப்பட்டுள்ளது. யாராவது காணிகளை உபயோகித்து விட்டு கைவிட்டிருந்தால் இந்த சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் பூர்வாங்க அறிவித்தல் பிரசுரிக்கலாம். அந்த பூர்வாங்க அறிவித்தால் பிரசுரித்து மூன்று மாத காலத்தில் காணி உரிமை உள்ளவர் காணி ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். முன்வைக்காது விட்டால் அக்காணி அரச காணியாக பிரகடனப் படுத்தப்படும். இதுதான் கணி காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விடயம்.
உறுதி உண்டு என்று கோரிக்கை விடுத்தால் அந்த ஆவணங்களை சோதித்துப் பார்த்து உறுதி நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அக் காணி விடுவிக்கப்படும். இவ்வாறான நிலையில் இங்குள்ளவர்கள் தாங்கள் பாவிக்கும் காணி தொடர்பான கோரிக்கைகளை எழுத்து மூலமாக முன்வைக்க வேண்டும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இப் பிரதேசத்திலே பலகாலம் பாரிய இடம் பெயர்வு நடந்தது.இதனால் காணி உறுதிகள் இல்லாமல் போயிருக்கலாம். காணி அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்படாது இருந்திருக்கலாம். காணி உறுதி உரிமையாளர் பல காலத்துக்கு முன்னால் இறந்திருக்கலாம்.
இவ்வாறாக நீண்ட இடைவெளி இருக்கின்ற நிலையிலே இதில் உரிமை இருப்பது ,உறுதி இருப்பது என்று என்று சொல்வது சற்று கடினமாக இருக்கும். உங்களது ஆவணங்களை பரிசோதித்து பார்த்து என்ன இருக்கின்றது என்ன இன்னும் வேண்டும் என்ற நிலைமையை அவதானிக்க வேண்டும். எவ்வளவு பேரிடம் ஆவணங்கள் இருக்கின்றன என்பதை கொண்டுதான் அரசுடன் பேசலாம்.
இவ்வாறான ஒரு நிலையில் புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களிடம் ஓர் அன்பான கோரிக்கையை முன்வைக்கின்றோம். உங்களுக்கு இங்கே காணி இருக்குமானால் தயவு செய்து இங்கு வந்து அல்லது சட்டபூர்வ அற்ரோனிக் தத்துவக்காரரை நியமித்து காணி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.அப்படி காணியில் அக்கறை இல்லையென்றால் இங்கு காணி இல்லாத எமது மக்களுக்கு இனாமாக அதனை எழுதிக் கொடுங்கள்.தயவு செய்து உங்களின் காணிகள் அரச காணிகளாக போவதை அனுமதிக்க வேண்டாம்.
இந்தியாவிலே தற்போது ஒரு இலட்சத்தை அண்மித்த எமது மக்கள் இருக்கிறார்கள். சர்வதேச சட்டத்தில் அவர்கள் அகதி என்றே இருக்கின்றார்கள். ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதியாக இருக்கின்ற போது அவர்களது நிலங்களை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.
மார்ச் 28ஆம் திகதியிடப்பட்டஇந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டுதினங்களுக்கு முன்னர்தான் அம்பலமாகியுள்ளது. இதனை அரசு வாபஸ் பெற காலக்கெடு – மே 28வரை – வழங்குகின்றோம். அந்தத்திகதிக்குள் இந்த வர்த்தமானியை அரசுவாபஸ் பெறாது விட்டால் ஏனையதமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் மக்களை இணைத்துக்கொண்டுஅந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சாத்வீக முறையில் பெரும் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றே முன்னெடுப்போம்
“இது தனித்து தமிழரசுக் கட்சி முன்னெடுக்கப் போகின்ற போராட்டம் அல்ல.ஒட்டுமொத்த முழுத் தமிழினமும் தமிழ்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப்போகின்ற போராட்டம். தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்ட எழுச்சியை தங்கள் நிலங்களைக் காப்பதற்காக முன்னெடுக்கவேண்டிய ஒரு தேவை வந்துள்ளது.தமிழினத்தின் கருத்தை இந்தப்போராட்டம் மூலம் முழு உலகக்கும் நாம்முன் வைப்போம் என்றார்.
![]()