குறள் கூறும் பொருளில் பிறர் பார்வையும் என் பார்வையும் – பார்வை -05… சங்கர சுப்பிரமணியன்


மதுரை மாணிக்கம் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் யாருக்கும் தெரியுமா? மிக அருகிலுள்ள வில்லாபுரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியாது. அவர் உறவுக்காரராக இருந்து கொஞ்சம் வசதி வாய்ப்புள்ளவராக இருக்கும் பட்சத்தில் அவரை தம் வீட்டுத் திருமணத்துக்கு தாலியை எடுத்து கொடுக்க சொல்லியிருந்தால் அந்த விசயம் பிரபலமாகியிருக்குமா?
கண்டிப்பாக பிரபலம் அடைந்திருக்காது. அவர் உறவுக்காரர் என்ற முறையில் ஆயிரம்
மொய் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்திருப்பார். தாலியை எடுத்து கொடுத்ததால் ஐயாயிரம் மொய் எழுதிருப்பார். அதாவது பெரிதாக வெளியே தெரிந்திருக்குமா என்றால் அதுவும் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது. காரணம் என்ன?
பெரிய காரணம் ஒன்றுமில்லை. அவரையே யாரென்று யாருக்கும் தெரியாது. அதே மாணிக்கம் என்பவர் மதுரை மேயர் ஆனால் என்ன நடக்கும். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றால் என்னவாகும்? மதுரை மேயர் மாணிக்கம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார் என்று எல்லா ஊடகங்களிலும் செய்தி வரும்.
அவர் மேயர் ஆவதற்குமுன் அதே கோவிலுக்கு எத்தனையோ முறை போயிருப்பார். அது யாருக்கும் தெரியுமா? கண்டிப்பாக தெரிந்திருக்காது. ஆனால் மேயர் ஆனபின் யாருக்கும் தெரியாமல் போகுமா? அல்லது ஊடகத்தினர்தான் விட்டு வைப்பார்களா?
ஊடகங்களில் மதுரை மேயர் மீனாட்சி அம்மன் கோவில் வருகை. பக்தர்களுடன் நின்று அம்மனை வழிபட்டார் என்று சிறப்பு செய்தியாகவே வெளிவரும். அத்தோடு நின்றுவிடாமல் அவர் கால் இடறி கீழே விழ இருந்தது முதல் அவர் கோவிலை விட்டு செல்லும்வரை நடந்த எல்லாவற்றையும் செய்தியாகப் போடுவார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? சமூகத்தில் நன்றாக தெரிந்து பிரபலமானவர்களாக இருந்தால் அவர்கள் என்ன செய்தாலும் அது செய்தியாகிவிடும். இதுவே அந்த இடத்தில் ஒரு திரைப்பட நடிகராக இருந்தால் சொல்லத் தேவையே இல்லலை. அதுவும் அந்த நடிகர் உச்சகட்ட நடிகராக இருந்தால் ஊடக வெளிச்சம் அதிகமாகவே பாயும்.
இப்போது ஒரு குறளை எடுத்துக் கொள்வோம்.
“யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
என்ற இந்த குறளுக்கு எல்லோரும் காணும் பொருள், ஒருவர் எதைக் காக்க முடியாது போனாலும் நாவைக் காக்க வேண்டும். அப்படிக் காக்காவிட்டால் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்கு காரணம் ஆகிவிடும் என்பதாகும்.
இதை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்.
மற்றவர்கள் பொதுவாக ஒருவர் எதைக் காக்காது போனாலும் நாவைக் காக்க வேண்டும் என்பதில் சற்று வேறுபடுகிறேன். நான் அந்த ஒருவர் என்பதை சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பிரபலமான ஒருவராகப் பார்க்கிறேன்.
நன்கு அறியப்படாத பிரபலமற்ற மனிதர் நாகாக்கா விட்டால் அவர் பெறப்போகும் துன்பம் சிலரிடமிருந்து மட்டுமே வரும். மேலும் அவர் பெறும் துன்பம் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே சமூகத்தில் நன்கு அறியப்பட்ட மனிதர் நாகாக்கா விட்டால் அவருடைய பேச்சால் அவருக்கு பலரிடமிருந்து துன்பம் வரும். அதுமட்டுமல்ல அவர் பேசிய பேச்சு பலராலும் பேசப்பட்டு பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தும்.
இந்த சந்தர்ப்பத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வைப்பற்றி சொல்கிறேன். சமூகத்தில் நன்கறியப்பட்ட திரைப்பட நடிகர் சிவகுமார் அவர்களைப் பற்றிய செய்தி இது. நடிகர்
சிவகுமார் மகன் சூர்யா நடித்த திரைப்படமான ரெட்ரோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இதில் பேசிய நடிகர் சிவக்குமார் ஹோலிவுட்டில் முதன்முதலில் சிக்ஸ்பேக் வைத்தவர் நடிகர் சூர்யாதான் என்று பேசியிருந்தார். இதற்கு பதில்கொடுப்பது போல் ஒரு நேர்காணலில் நடிகர் விஷால்
சொன்னதுதான் இப்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2007ல் நடிகர் தனுஷ்தான் சிக்ஸ்பேக் வைத்திருந்தார் என்று குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி அதன்பின் வாரணமாயிரம் படத்தில் நடிகர் சூர்யாவும் சத்யம் படத்தில் தானும் சிக்ஸ்பேக் வைத்திருந்ததாகவும் சொன்னார். இது சிவகுமாருக்கு சரியான பதிலைக் கொடுத்துள்ளது என்பதில் வியப்பில்லை.
இதைக் கேள்விப்படும்போது ஒரு பண்பட்ட நடிகரும் மூத்த நடிகருமான நடிகர் சிவக்குமார் இதுபோல் எதையும் நன்றாக அறியாமல் மேடையில் பேசலாமா என்ற எண்ணம் எழவே செய்கிறது. இவரை நான் பண்பட்ட நடிகர் என்பதால் மற்ற நடிகர்களெல்லாம் பண்பில்லா நடிகர்கள் என்று வலிந்து பொருள் கொள்ள வேண்டியத அவசியமில்லை.
ஒரு ஊரில் நான்கு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று பொருளல்ல. சின்னாளப்பட்டியில் சிங்காரம், சிதம்பரம், சீனிவாசன் மற்றும் சிவசாமி போன்ற வள்ளல்கள் இருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் எவரும் எச்சில் கையால்
காக்கா விரட்டாதவர்கள் என்று எண்ண வேண்டிய அவசியமும் இல்லை.
இன்னும் அதிகமானவர்கள் கூட இருப்பார்கள். அவர்களைப்பற்றி நாம்
கேள்விப் பட்டதில்லை. திரைத்துறையில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் சிவகுமாரைப் பற்றி அவர் நடித்த காலத்தில் கிசுகிசுக்களோ வேறு சர்ச்சைக்குரிய செய்திகளையோ நாம் கேள்விப் பட்டதில்லை. சமீப காலங்களில் அவரைப் பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் நிலவி வருவதையும் மறுப்பதற்கில்லை.
அதிலும் அவர் ரெட்ரோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தன் மகன் சூர்யாவைப் பற்றி மிகைப்படுத்தி பேசியது ஏற்கவே முடியாத ஒன்றாகும். ஆதலால் எல்லோரிடமிருந்தும் வசைச்சொல்லைப் பெற்று இழுக்கடைந்து வருகிறார்.அதிலும் சில ஊடகங்களில் அவர் பேசியதை திமிர்த்தனமன பேச்சு என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.
செய்யும் வினைக்கு எதிர்வினை நடக்கும்போது அமைதிகாத்தே ஆகவேண்டும். ஒவ்வொருவர் அணுகுமுறை ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதில் யாரையும் குறைகூற இயலாது.
இதற்கெல்லாம் காரணம் சமூகத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் நாவடக்கத்துடன் இருக்க வேண்டும். அப்படி நாகாக்கா விட்டால் அவரை அறிந்த எல்லோரும் வரைமுறையின்றி தூற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.
நடிகர் சிவக்குமார் மட்டுமல்ல சில அரசியல்வாதிகளும் நாவடக்மின்மையின்றி நடந்து கொண்டதால் எதிர்வினைகளை சந்தித்து வருவதையும் காண்கிறோம்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()