இலங்கை

ஜெனிவாவில் இனிமேல் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா இலங்கையை கைவிடும்!

இந்தியாவுடனான ஒப்பந்தங்களால் ஜெனிவாவில் இலங்கைக்கு பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவான வாக்குகளை இழக்க நேரிடலாம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நுகேகொட ஆனந்த சமரகோன் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு சரத் வீரசேகர மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய்களையே கூறுகின்றது. கடன் பெற்று நாட்டு மக்களுக்கு உணவு கொடுப்பதென்றால் எதற்கு ஜனாதிபதி என்று கேட்டவர்கள் இப்போது வரையில் 15ஆயிரம் கோடி ரூபாவை கடனாகப் பெற்றுள்ளனர். எமது கலாசாரங்களையும் இவர்கள் அகௌரவப்படுத்துகின்றனர்.

எமது மதத்திற்கும் இவர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். மதங்கள் அற்ற நாடாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். அதேபோன்று உருவ வழிப்பாட்டையும் எதிர்ப்பவர்களாக இருந்தனர். சஹரான் என்ற அடிப்படைவாதியும் இப்படிதான் இருந்தார். அவ்வாறான சிந்தனைகளையே இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களும் கொண்டுள்ளனர்.

இதேவேளை நாட்டின் தேசிய பாதுகாப்பையும், இறைமையையும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தங்களை இந்தியாவுடன் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார நாட்டின் தற்காலிக உரிமையாளரே. இதனால் இவ்வாறான உடன்படிக்கைகளை செய்ய முன்னர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.

முன்னர் இவர்களே இந்திய அரசாங்கத்தின் உடன்படிக்கைகளுக்கு எதிராகப் பெரும் போராட்டங்களை நடத்தினர். இவர்கள் இப்போது பூனைக் குட்டியை போன்று மோடியிடம் சென்று உடன்படிக்கைகளை செய்கின்றனர்.

இந்தியா பாகிஸ்தானுடன் போரை அறிவித்துள்ளது. இவ்வாறான நிலைமையில் இலங்கையுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையில் என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை. அது பிரச்சினைகளை கொண்டுவரலாம். இந்தியாவின் பிராந்தியங்களின் ஒன்றை போன்றே இலங்கை இருக்கின்றது. அதேபோன்று ஜெனீவாவில் எமக்கு எதிரான தீர்மானங்களின் போது சீனா, ரஷ்யா,பாகிஸ்தான் போன்ற நாடுகளே இருக்கின்றன. இந்தியா அதில் வாக்களிக்காது தவிர்த்துக்கொள்ளும், இவ்வாறான நிலைமையில் நாங்கள் இந்தியாவுடன் ஒப்பந்தங்களை செய்தால் அடுத்து வரும் கூட்டத் தொடர்களில் அந்த நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா? இதனால் இந்தியாவுடனான உடன்படிக்கைகளில் என்ன இருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *