அநுரவின் அரசாங்கத்திலேயே மகிந்தவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்

அநுரகுமாரவின் அரசாங்கத்திலேயே மகிந்த ராஜபக்ஷவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்த வெளியரங்கில் நேற்று நடத்தப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,
மகிந்த ராஜபக்ஷ பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அதன்படியே யுத்தத்தை நிறைவு செய்தார். அன்று அவர் யுத்தத்தை நிறைவு செய்தமையினாலேயே இன்று ஜனாதிபதிக்கே வடக்கிற்கு செல்ல முடியுமாக இருக்கின்றது. நாங்கள் வீதிகளை அமைத்தோம். அதில் கொள்ளை இடம்பெற்றதாக கூறினர். அபிவிருத்திகளை செய்யும் போது சேறு பூசும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். தமக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு சேறு பூசுவதை பழக்கமாக கொண்டிருந்தனர். அன்று நாங்கள் எங்களுக்கென வேலைத்திட்டங்கள் இருந்தமையினால் எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் பொய்களை கூறியே ஆட்சிக்கு வந்துள்ளது. வேலை செய்யும் மக்களின் ஊடாக ஆட்சிக்கு வந்த அரசாங்கமே. அவர்கள் இப்போது தொழிலாளர்களை மறந்துள்ளனர். மக்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியாதளவுக்கு வரிகளை அதிகரித்துள்ளனர். நாங்கள் வரிகளை குறைத்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நாங்கள் வீணாக மக்கள் மீது வரிகளை அறவிடவில்லை. மக்களின் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தியே தீர்மானங்களை எடுத்தோம். நாங்கள் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை தவறாக அர்த்தப்படுத்தவே முயற்சித்தனர்.
எவ்வாறாயினும் அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திலேயே மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிப்பதற்காக நான் போராடுவேன். அந்த எதிர்பார்ப்பை கொண்டே தேர்தல்களுக்கு முகம்கொடுக்கின்றோம். இந்த பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுவோம்.
இப்போது எமது கட்சி புதிதாகியுள்ளது. புதிய தரப்பினருக்கு கதவுகள் திறந்துள்ளன. இதனை ராஜபக்ஷக்களின் கட்சிகள் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் இந்த நாட்டை நேசிப்பவர்களுக்காக அமைக்கப்பட்ட கட்சியே. மற்றைய மதங்களை மதிப்போம். சகல கலாச்சாரங்களையும் மதிப்போம். இதன்படி கட்சியை கட்டியெழுப்பி புதிய சந்ததியுடன் அரசாங்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.
![]()