இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நிறுத்தப்படும்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்காக சட்டமூலத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மகிந்த ராஜபக்‌ஷவை ஏன் இன்னும் அவர் தற்போது வசிக்கும் வீட்டில் இருந்து வெளியேற்றவில்லை என்று சிலர் கேட்கின்றனர். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவது தொடர்பான குழுவின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இதன்படி நீதி அமைச்சர், பொது நிருவாக அமைச்சர் ஆகியோர் குறித்த அறிக்கையை பார்த்து அதற்கான சட்டமூலங்களை தயாரிக்க தயாராகுமாறு ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவையில் தெரிவித்தார்.

இதன்படி கடந்த அமைச்சரவையில் பொதுநிருவாக அமைச்சர் இந்த சட்டமூலலங்களை தயாரிக்கும் நடைமுறைகள் தொடர்பிலான யோசனையொன்றை முன்வைத்தார். இதன்போது சட்டவரைபு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சருக்கு ஜனாதிபதி அறிவித்தார்.

குறிப்பாக மாதத்திற்கு இரண்டு வாரங்கள் பாராளுமன்றம் கூடுகின்றது. இதன்படி எதிர்வரும் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற முடியுமாக இருக்கும்.

இதன்மூலம் திருடர்களுக்கு சிறைக்கு செல்வது மாத்திரமின்றி கொள்ளையடித்தவற்றை பெற்றுக்கொள்ளவும், சிறப்புரிமைகளை நிறுத்தவும் முடியுமாக இருக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *