ரணிலின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதம் எதனையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாசிக்கவில்லை என்றும், சமூக வலைத் தளத்தில் ரணில் விக்கிரமசிங்கவே பகிரங்கப்படுத்திய தகவலை அடிப்படையாகக் கொண்டே அது தொடர்பாக ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு தான் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி வாசித்துள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனைக் கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்த பின்னர் ஏப்ரல் 11ஆம் திகதி அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் 11ஆம் திகதி வர முடியாது 17ஆம் திகதியே வர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இது பொதுவான தகவலாகும். இங்கிருந்தே ஜனாதிபதி அந்தத் தகவலை பெற்றிருக்கலாம். முன்னாள் ஜனாதிபதிக்கு அவ்வாறு சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த விடயம் மறந்திருக்கலாம். இது இரகசிய தகவலல்ல. ரணில் விக்கிரமசிங்க முதல்நாள் இரவு பகிரங்கப்படுத்திய விடயத்தையே மறுநாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதுவே நடந்துள்ளது என்றார்.
![]()