கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் – 09 …. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

சிவபெருமானும் அவதாரங்கள் எடுத்திருக்கிறார். பராசக்தியும் அவதாரங்கள் எடுத்ததாக சொல்லப் படுகிறது. இந்து மதம் ஒன்று என்றால் சைவத்துக்கு சிவனும் வைஷ்ணவத்துக்கு திருமாலும் போதாக்குறைக்கு ஏன் பராசக்தியும் அவதாரம் எடுக்கவேண்டும். அப்படியானால் பிள்ளையார், முருகன் மற்றும் சூரியன் போன்றோர் அவதாரங்கள் எடுத்திருக்கிறார்களா?

என்னய்யா புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாய் என்று பதற வேண்டாம்? அதிலும் சூரியனை திடீர்னு கொண்டு வருகிறாயே இது நியாயமா என்று கேட்காதீர்கள்? குந்திதேவியை கர்ப்பமாக்கி யாருக்கும் தெரியாமல் கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விடக் காரணமான சூரியனா? என்று நீங்கள் நினைப்பது தவறில்லை. உண்மையில்
அந்த காவியத்தில் வருகிற சூரியன்தானா என்று எனக்கு தெரியாது.

அதேபோல் வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் என்று குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்ப கவிராயர் கவிதையில் தேர்க்காலும் பரிக்காலும் வழுகக்கூடிய தேருக்கு சொந்தக்காரனாக வருகின்ற செங்கதிரோனா என்பதும் எனக்குத் தெரியாது.

இந்து மதத்தைப் பற்றி பேசும்போது எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் வானில் உலாவரும் பகலவனை ஏன் ஊடாக நுழைக்கவேண்டும்? பொதுவாக காட்டில் ராஜாவாக திரியும் சிங்கமேஅவதாரத்தில் வரும்போது சூரியன் வரக்கூடாதா என்ன? மீன், ஆமை, பன்றி மற்றும் சிங்கமென அவதாரங்களாக வரும்போது இவையெல்லாம் உயிர் வாழ ஆதாரமான ஆதவன் ஏன் வரக்கூடாது?

அவியல் சாப்பிட்டிருக்கிறீர்களா? தென் தமிழகத்திலும் கேரளாவிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவுவகையில் ஒன்று. மற்ற இடங்களில் இது உண்டா என்று எனக்கு தெரியாது. திருமண வீடுகளில் சப்பாட்டில் பொரியல், கூட்டு, பச்சடி போன்று இதுவும் ஒருவகை. இதில் கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், முருங்கக்காய், வெள்ளைப் பூசணிக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து சமைப்பதுதான் இந்த அவியல்.

என்ன கட்டுரை எழுதுகிறாயா சமையல் குறிப்பு சொல்கிறாயா? என்று சிலர் வாய்க்குள் முணுமுணுப்பதை என்னால் அறிய முடிகிறது. உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த அவியலுள்ள காய்கறிகளைப் போன்றே சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கவ்ரம், சௌரம் அல்லது ஆங்னேயம் போன்ற ஆறுவழிபாட்டு முறைகள் இணைந்த கலவைதான் இந்துமதம்.

இதில் சைவம் மற்றும் வைணவம் நமக்கு தெரிந்தவை. மற்றவைகளயும் பற்ற
சொல்லிவிடுகிறேன். சாக்தம் என்றால் சக்தி வழிபாடு. காணபத்தியம் என்றால் கணபதி வழிபாடு. கவ்ரம் என்றால் முருகன் வழிபாடு. சௌரம் என்றால் சூரிய வழிபாடு. இந்த ஆறும் சேர்ந்ததுதான் இந்துமதம். இப்படி ஆறுவகை வழிபாட்டையும் சேர்த்தது யார்?

யார்! யார்! யாரவ(ள்)ர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? என்று பாசமலர் படத்தில் வரும் பாடலைப் பாடத்தான் எனக்கு பாடத்தெரியும். வேறொன்றும் தெரியாது. உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது. உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது என்று படிக்காத மேதையில் வரும்
பாடலை வேண்டுமானாலும் சேர்த்து
பாடுவேன்.

தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லுங்கள். ஏனென்றால் பிற மதங்களைப் போல் இல்லாமல் இந்து மதத்தை உருவாக்கியவர் யார் என்று தெரியாது. இந்த மதத்தைக் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ அதற்கென்று ஒரு தனி அமைப்பென்று ஒன்றும் கிடையாது. அப்படி இருந்தால் ஆறு வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எந்த அடிப்படையில் வந்தனர்?

மும்மூர்த்திகளில் பிரம்மா எப்படி வந்து சேர்ந்தார்? எந்த ஒரு செயலைச் செய்யுமுன்னும் கணபதியை முன் நிறுத்துவது இந்துக்களின் வழக்கம். ஒரு தாளில் எழுதும்போதுகூட பிள்ளையார் சுழிபோடுபவர்கள் மும்மூர்த்திகளில் பிள்ளையாருக்கு எப்படி இடம் கொடுக்க மறந்தார்கள்.

நாம் மாணவனாக ஒரு பள்ளியில் படிக்கிறோம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். கணக்கு ஆசிரியர் தமிழ் ஆசிரியர் விஞ்ஞான ஆசிரியர் ஆங்கில ஆசிரியர் என பல ஆசிரியர் இருப்பார்கள். எல்லா ஆசிரியரிடமும் ஒரே மாதிரியாக நடப்போம் அல்லவா? ஒரு ஆசிரியரிடம் மிகுந்த மதிப்புடனும் இன்னொரு ஆசிரியரிடம் மதிப்பற்றும் நடந்து கொள்வோமா?

ஏடறிவித்தவனை இறைவன் என்பார்கள். ஏடறிவித்தவரிடமே எவ்வித வேறுபாடும் காட்டாதபோது இறைவனிடம் இவ்வளவு வேறுபாடா என்று எண்ணம் தோன்றுவதில் தவறொன்றும் இல்லையே.

புராணங்களில் ஆங்காங்கு வலுசேர்க்க குட்டிக்கதைகள் வருவதுபோல் நாமும் அந்த வழிமுறையை ஏன் பின்பற்றக்கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுகிறது. அதற்கு ஒரு வடிகாலாக ஒரு சிறிய தகவல். ஒருமுறை ஶ்ரீ என்று பெயருக்கு முன் நாங்கள் மரியாதைக்காக போடுவதை திரு என்று மாற்றுகிறீர்களே என்றார் ஒருவர். அதனால் திருடன் என்பதை ஶ்ரீடன் என்று எழுதலாமா என்றாராம். அவர் யார் என்று இந்த விடுகதைக்கு பதிலையும் உங்களிடமே
விடுகிறேன்.

மீண்டும் கட்டுரைக்குள்நுழைவோம். ஆசிரியரிடமே மரியாதை செலுத்துவதில் வேறுபாடு காட்டாத நாம் நம்மை எல்லாம் காக்கும் எம்பெருமானிடம் வேறுபாடு காட்டலாமா. வேறபாடு என்றால் பணமிருக்கும் இடத்தில் பெருமானுக்கு வைரக்கிரீடமும் பணமற்ற இடத்தில் பட்டுத்துணியையும் தலயில் சூட்டலாமா என்பதல்ல. கடவுளே ஆனாலும் பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்பதை வள்ளுவன் வாய்மொழி வழியுறுத்துகிறது அல்லவா?

நான் திருமாலின் அவதாரங்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன். எல்லா அவதாரங்களுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்கிறோமா? கல்லானாலும் கணவன்
என்று வக்கணையாக பழமொழி சொல்லும் நாம் அவதாரம் என்றாலும் கடவுள் என்று எல்லா அவதாரங்களையும் மதிக்கிறோமா என்பதே என் கேள்வி.

தன்னைவிட வலிமை குறைந்தவர்களிடம் மோதும்போது தன்னைவிட வலிமை மிக்கவர் நம்மிடம் மோதினால் என்னவாகும் என்ற கருத்தை நினைக்க வேண்டும் என்று குறள் கூறும் கருத்து என் நினைவுக்கு வருகிறது.
இந்த நினைவுதான் என்னை அவதாரங்களில் பொருத்திப்பார்க்க வைக்கிறது.

எல்லா அவதாரங்களையும் சமமாக மதிக்கும் மாண்பு நம்மிடம் இருக்கிறதா? நூற்றுக்கு நூறு இல்லையென்பதை ஆணித்தரமாக சொல்வேன். சிங்கத்தை நாம் வேட்டையாடுவதில்லை. ஏனெனில் அது ஆபத்து மிக்கது. அதனால் நோவாமல் நோம்பு எடுப்பதைப்போல் நம் தோள்வலிமையைக் காட்டி மான், முயல் போன்றவற்றை வேட்டையாடி மார்தட்டிக் கொள்கிறோம்.

அதே பயம் என்ற உள்ளுணர்வு இருப்பதால் நரசிம்ம மூர்த்தியின் அவதாரத்தை பயபக்தியுடன் வணங்குகிறோம். என்னதான் கடவுளின் அவதாரம் என்றாலும் பரசுராமனை நரசிம்மமூர்த்தியை வணங்குவதுபோல் வணங்குகிறோமா? ஏனெனில் இவரை கும்பிட நினைக்கும்போதே இவர் தாயைக் கொன்றவர் என்ற எண்ணம் அல்லவா மனதில் வரும்.

-சங்கர சுப்பிரமணியன்.

(தொடரும்….)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *