பாகிஸ்தானியர்களை உடனடியாக வௌியேறுமாறு இந்தியா உத்தரவு

விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 26 பேர் பலியாகினர்
இதைதொடர்ந்து நாடு திரும்பிய இந்திய பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார்.
இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுடனான வாகா எல்லையை உடனடியாக மூடப்படும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே 1ம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
மேலும், விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
![]()