உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்புண்டு!

பேராசிரியர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புகள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும், இது தொடர்பான விசாரணைகளின் ஊடாக கிடைக்கும் புதிய தகவல்கள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது, அதனை திட்டமிட்டவர்கள் யார் என்ற தகவல்களை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்கு உறுதிமொழிகளை வழங்கியுள்ளோம். தாக்குதலின் பிரதான பொறுப்பாளர்கள் மற்றும் திட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது மற்றும் அவர்களுக்கு தண்டனை வழங்குவது எமது பொறுப்பாகும். இதன்படி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் அண்மையில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் பேராசிரியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஏதேனும் தொடர்புகள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகளை கண்டறிவதில் கடினமான நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் பாரதூரமான குற்றவாளிகளாவர். அரசாங்கத்துடன் தொடர்புடைய உயர் நிறுவனங்களின் ஏதேனும் ஒத்துழைப்புடன் நடந்த சம்பவம் என்பது தெளிவாகின்றது. அவ்வாறு அன்றி தற்கொலை குண்டுதாரிகள் மாத்திரம் சென்று நடத்திய தாக்குதல் அல்ல இது. இதனால் தாக்குதலின் பின்னர், இந்தத் தாக்குதல்களை திட்டமிட்டிருக்கலாம் என்று அரசியல் ரீதியில் நாங்கள் சந்தேகிக்கும் தரப்பினர் ஆட்சியிலும் இருந்தனர். அப்போது சாட்சியங்கள் அழிக்கப்பட்டும், மூடி மறைக்கப்பட்டும் இருந்தன. எனினும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் புதிய சாட்சியங்கள் மற்றும் புதிய தகவல்கள் மூலம் இந்த தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது, அதனை திட்டமிட்டவர்கள் யார் என்பதனை வெளியிட முடியுமாக இருக்கும். இதனாலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்ட பின்னர் ரணில் மற்றும் கம்மன்பில போன்றோர் குழப்பமடைந்துள்ளனர்.
இதேவேளை இதற்கு மேலதிகமாக தகவல்கள் உள்ளன. முன்னாள் அரச குடும்பமும் குழப்பத்தில் இருக்கின்றது. எவ்வாறாயினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
![]()