இலங்கை

திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை தீர்க்க விடாது அரசியல்வாதிகளே தடுக்கின்றனர்

யுத்தம் இல்லாத நிலைமையில் இனியும் பாதுகாப்பு காரணத்தை காட்டி மக்களின் காணிகளை வைத்திருக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், இதன்படி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள விடுவிக்கக்கூடிய சகல காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ். திஸ்ஸ விகாரை விவகாரம் இலகுவாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினையே என்றும், ஆனால் இதனை தீர்க்க விடாது அரசியல்வாதிகளே தடுக்கின்றனர் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பணத்தில் வரலாற்று பெறுபேற்றை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். பொதுவாக தேர்தல்களில் மக்களை பிரிப்பதே நடந்தன. வடக்கு மக்கள் தமிழ் கட்சிகளையும் கிழக்கு மக்கள் முஸ்லிம் கட்சிகளையும் தெற்கு மக்கள் சிங்கள கட்சிகளை தெரிவு செய்வர். இதனூடாக மக்கள் தேர்தல்களில் பிரிக்கப்படுவதே நடந்தன. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் சகல இன மக்களும் தேசிய மக்கள் சக்தியையே தெரிவு செய்தனர். இவ்வாறு தேர்தலில் ஒன்றிணைந்த நாங்கள் பிரிய வேண்டுமா? நாங்கள் சண்டையிட்டுக்கொள்ள வேண்டுமா? நாங்கள் சந்தேகத்துடன் வாழ வேண்டுமா? அவ்வாறான நிலைமை அவசியமில்லை. நாங்கள் அனைவரும் ஒரே நாட்டு மக்களாக சகல உரிமைகளை கிடைக்கக்கூடிய நியாயமான நாட்டை உருவாக்குவோம். அவ்வாறான நாடே எமக்கு அவசியமாகும்.

நாங்கள் யுத்தங்களை பார்த்துள்ளோம். இதனால் எமக்கு எஞ்சியது என்ன? உறவுகள், நண்பர்களை இழந்துள்ளோம். வடக்கு, கிழக்கில் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது. அந்த நிலைமை எமக்கு அவசியமா? எமது பரம்பரையினர் சண்டைபிடித்துக்கொண்டோம். ஆனால் எமது பிள்ளைகள் யுத்தம் இல்லாத ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி அந்த நாட்டை உருவாக்கும் என்பதனை உறுதியாக கூறுகின்றோம். எமக்கு இனவாதம் அவசியமில்லை.

திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையொன்று உள்ளது. அண்மையில் நடந்த பாராளுமன்ற ஆலோசனை குழு கூட்டத்தில் திஸ்ஸ விகாரை பிரச்சினையை மிக இலகுவாக தீர்க்கலாம் என்றும், அதனை அடிப்படையாகக் கொண்ட வடக்கு, கிழக்கு அரசியலில் இருந்து விலகுங்கள் என்று கூறினேன். அதில் தங்கியுள்ள அரசியலை நீக்கி விகாரையின் மதகுமார், நாக விகாரை பிக்குமார், அந்த கிராமத்தில் வாழும் மக்கள் ஒன்றிணைந்தால் இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம். இதனை தீர்க்க முடியாமல் தடுப்பது யார்? அரசியல்வாதிகளே. அவர்களுக்கு இனவாதம் மீண்டும் தேவையாக உள்ளது.

நாங்கள் அரசாங்கம் என்ற ரீதியில் எந்த பிரதேச மக்களின் உரிமைகள், மரபுரிமைகளை பரிக்கவோ ஒருபோதும் செயற்பட மாட்டோம். இந்த நாட்டில் தொல்பொருள் இருந்தாலும், வரலாற்று சின்னங்களை கண்டாலும் அதனை சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பார்க்க வேண்டியதில்லை. அவ்வாறு பார்ப்பது தவறாகும். அதனை வரலாற்று சின்னங்களாகவும், எமது மரபுரிமைகளாகவுமே பார்க்க வேண்டும். ஆனால் நாட்டில் வரலாற்று சின்னங்கள் இருந்தால் அது எந்த மதம், எந்த மொழிக்கு உரியது என்று தேடுகின்றனர். அது அவசியமில்லை. அதனை அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாக்க வேண்டும் என்பதனையே பார்க்கின்றோம். ஆனால் இனவாத குழுக்கள் அவ்வாறு செயற்படுவதில்லை. இனவாதத்தை தோற்றுவித்து மீண்டும் நாட்டில் மோதல்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

ஆனால் நான் ஒன்றை உறுதியாக கூறுகின்றேன். என்ன வேடத்திலாவது மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சித்தால் அதனை தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். எங்களுக்கு இன ஒற்றுமையே அவசியமாகும். இந்த யாழ்ப்பாணத்தில் பரம்பரையான அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இருந்தன. இடதுசாரி கட்சிகள், தமிழ் அரசியல் தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் இருந்தும் இங்குள்ள மக்கள் எங்களை தெரிவு செய்துள்ளனர். இது சிறந்த தெரிவாகவே இருக்கின்றது. நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். எந்த நிலைமையிலும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை முறியடிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதனை உறுதியளிக்கின்றேன்.

நீங்கள் தீர்வு காண எதிர்பார்க்கும் பிரச்சினைகள் உள்ளன. அதனை தீர்ப்போம். இனவாத குழுக்கள் எந்த வகையில் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை முன்வைத்தாலும் நாங்கள் உங்களின் உரிமைகள், தேசிய ஒற்றுமைக்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதனை கூறுகின்றேன்.

முதலாவதாக பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இப்போது யுத்தம் இல்லை. யுத்தம் இருந்த காலத்தில் அதற்கான அவசியம் இருந்தன என்று கூறலாம். ஆனால் இனியும் பாதுகாப்பு காரணம் என்ற முத்திரையில் மக்களின் காணிகளை அரசாங்கம் கையில் வைத்திருக்க உரிமை இல்லை. இதனால் விடுவிக்கக்கூடிய சகல காணிகளையும் நாங்கள் விடுவிப்போம். வசிக்கவும், விவசாயத்திற்காகவும் வழங்குவோம். நாங்கள் இன்னுமொரு யுத்தம் வருமென்ற எண்ணத்தில் வேலை செய்யவில்லை. கடந்த கால அரசாங்கங்கள் மீண்டும் யுத்தம் வரும் இதனால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் இருக்க வேண்டும். அங்கே இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்றே செயற்பட்டனர். ஆனால் நாங்கள் யுத்தம் உருவாகுவதை தடுப்பதற்காகவே வேலை செய்கின்றோம். இதுவே எமது அரசாங்கத்தின் கடமையாகும்.

இதேவேளை இந்த பிரதேசத்தில் பெருமளவான வீதிகள் மூடப்பட்டிருந்தன. இப்போது மீண்டும் கட்டம் கட்டமாக அவற்றை மீளத் திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இங்கே மட்டுமல்ல கொழும்பிலும் வீதிகள் மூடப்பட்டிருந்தனர் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகைகளுக்கு முன்னால் வீதிகளை தீறக்கப்பட்டுள்ளன. அந்த வீதிகளே திறக்கப்பட்டிருக்கையில் யாழப்பாணத்தில் வீதிகளை மூட உரிமையில்லை. அவற்றை திறந்து மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். மறக்க வேண்டிய விடயங்களை மீண்டும் ஏற்பட இடமளிக்கக் கூடாது.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் முடிந்தளவுக்கு உங்களின் பிள்ளைகளை அரசாங்கத்திடமும், பொலிஸ் நிலையங்களிலும், இராணுவ முகாம்களிலும் ஒப்படைத்திருந்தால் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய வேண்டும். அதுவே பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகும். காணாமல் போனோரின் பெற்றோரின் வேதனையை நான் அறிவேன். சாதாரணமாக ஒருவர் இறந்தால் அவரின் உடலை அடக்கம் செய்த பின்னர் சிறிது காலத்தில் அதனை மறந்துவிடுவோம். ஆனால் காணாமல் போனால் அவ்வாறு அல்ல. அந்தப் பெற்றோர் மீண்டும் மீண்டும் பிள்ளை உயிருடன் இருக்கின்றரா? எங்கே இருக்கின்றார்? என்ற வேதனையுடன் இருப்பர். இதனை நான் அறிவேன். இந்த வேதனையை இல்லாமல் செய்ய பிள்ளைகள் தொடர்பில் உண்மைகளை கூற வேண்டும். இது எவரையும் பழிவாங்கவோ, எவரையும் சிறைக்கு அனுப்பவோ அல்ல. அரசாங்கம் என்ற வகையில் அமைதிக்கான வேலையை செய்கின்றோம். நாங்கள் வரலாற்று வேதனைகளில் இருந்து மீள வேண்டும். நாங்கள் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும். இதற்காகவே தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்கின்றீர்கள். அச்சமின்றி நாங்கள் புதியவற்றை செய்வோம்.

பழைய ஆட்சியாளர்கள் நாட்டை பொருளாதார ரீதியில் நாட்டை வீழ்த்தினர். நாங்கள் படிப்படியாக நாட்டை கட்டியெழுப்புகின்றோம். ஐந்து வருடங்களின் பின்னர் பெருமளவில் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி 6 மாதங்களாக நிலையாக உள்ளது. பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். இதன்படி 76 பழைய, புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.

நாங்கள் சகல நாடுகளில் இருந்தும் உதவிகளையும் பெற்றுக்கொள்கின்றோம். இந்த நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும். நாங்கள் அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளோம். ஜுன் மாதத்தில் இருந்து நான்கு இலட்சம் மக்களுக்கு புதிதாக அஸ்வெசுமவை கொடுக்கவுள்ளோம். மருத்துவ மனைகளில் மருந்து தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 30ஆயிரம் பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பல நிறுவனங்களில் தமிழ் பேசுவோருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பிட்டளவில் தமிழ் பேசுபவர்களை அந்த சேவையில் இணைக்கவுள்ளோம். பொலிஸ் திணைக்களத்திற்கும் தமிழ் பேசுபவர்களை இணைக்கவுள்ளோம். புதிதாக நியமிக்கப்படவுள்ள 2000 பேரில் குறைந்தது 500 பேராவது தமிழ் பேசும் உத்தியோகத்தர் இருக்க வேண்டும். அதேபோன்று கடற்படை, விமானப் படையிலும் உங்களின் பிள்ளைகளை இணைக்க வேண்டும்.

இதேவேளை நாங்கள் அரசாங்கம் என்ற ரீதியில் வீண் விரயங்களை கட்டுபடுத்தி மக்களுக்கு அந்த பணம் செல்லக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை இருப்பதாக கூறினர். அது எனக்கு அவசியமில்லை. மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அபிவிருத்தி திட்டமொன்றை கூறுங்கள் என்று கூறியுள்ளேன். அதற்காக அந்த காணிகளை வழங்க தயாராக இருக்கின்றோம். அத்துடன் இங்குள்ள வீதிகளை அபிவிருத்தி செய்ய அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளோம்.

அதேபோன்று யாழ். நூலகம் கறுப்பு வரலாற்றை கொண்டுள்ளது. 1983இல் இந்த நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுவே இனவாதத்தின் உச்சக்கட்டமாகும். நாங்கள் இந்த நூலகத்திற்காக 10 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளோம். அத்துடன் நகர சபை கட்டிடம் உள்ளது. எந்த வேலையும் நடப்பதில்லை. ஆனால் இந்த வருடத்தில் வேலைகளை செய்யக்கூடிய வகையில் அங்கு திருத்தப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மக்களின் இடமாக மாற்ற வேண்டும்.

இதேவேளை விவசாயிகளுக்காக உர மானியம் மற்றும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கில் 16ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை பயிர்செய்கையை செய்ய முடியும். இதன்மூலம் புதிய தென்னை முக்கோண மையத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம். இதற்காக தென்னை விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன்மூலம் நாங்கள் வடக்கு, தெற்கு என்ற வேறுபாடு இன்றி ஒன்றாக பயணிப்போம். வடக்கு சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகளை கொண்ட பிரதேசமாகும். தென்னிலங்கைக்கு வருமளவுக்கு வடக்கிற்கு சுற்றுலா பிரயாணிகள் வருவதில்லை. ஆனால் நாங்கள் உள்ளாக விமான சேவைகளை விரிவுப்படுத்தி யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை நடத்தி வடக்கை சுற்றுலா பிரதேசமாக அபிவிருத்தி செய்வோம்.

வடக்கில் பெருமளவான மீன் வளங்கள் உள்ளன. ஆனால் சட்டவிரோத மீன்பிடி முறையால் முழு சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் உரிமைகளும் பரிக்கப்படுகின்றன. அண்மையில் இது தொடர்பில் இந்திய பிரதமருடன் கலந்துரையாடினேன். விரைவாக தீர்வுகாண வேண்டும் என்று கூறியுள்ளேன். வடக்கு கடல் வளம் வடக்கு மக்களுக்கு சொந்தமானது. இதனால் எமது வளத்தை பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்படையினருக்கு கூறியுள்ளேன். நீங்கள் வாக்களித்து எங்களை தெரிவு செய்துள்ளீர்கள். இதன்படி மக்களுக்கு உரியதை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

1983இல் இருந்து பெருமளவான வடக்கு மக்கள் இந்த நாட்டை விட்டு போயுள்ளனர். அவர்கள் உலகில் பெரிய வர்த்தகர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறியுள்ளனர். இதன்படி தமிழ் டயஸ்போராக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் பிறந்த பூமியை கட்டியெழுப்பவும், இங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மீண்டும் இந்த நாட்டுக்கு வருமாறு கோருகின்றோம். இந்த நாடு பாதுகாப்பானது. பழைய வரலாற்றை மறந்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளனர். மக்கள் இவ்வாறான அரசாங்கத்தை எதிர்பார்த்தனர். இதனூடாக தமது உரிமைகளை எதிர்பார்த்தனர். அதன்படி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர்.
எமது அரசாங்கத்தில் உள்ள எவரும் மக்களின் ஒரு சதத்தையேனும் வீண் விரயம் செய்யப்போவதில்லை. நாங்கள் இந்த நாட்டுக்காக சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக செயற்படுவோம். சட்டம் அனைவருக்கும் சமமானது. கடந்த காலங்களில் பணம் உள்ளவருக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவனுக்கு வேறு சட்டமும் இருந்தன. ஆனால் அந்த யுகம் முடிவடைந்துவிட்டது. இப்போது முதல்முறையாக அனைவருக்கும் சமமான சட்டத்தை உருவாக்கியுள்ளோம். அண்மையில் பொலிஸ்மா அதிபரே பொலிஸாருக்கு பயந்து பதுங்கியிருக்கும் நிலைமை இருந்தது.
இப்போது முன்னாள் முதலமைச்சர்கள் இருவர் சிறையில் இருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் ஒருவர் சிறையில் இருப்பதுடன், இன்னுமொரு அமைச்சர் தலைமறைவாக இருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதியின் மகன்களுக்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. குற்றங்கள் செய்து தப்பியிருக்க முடியாது. அந்த வரலாறு முடிவடைந்துவிட்டது. எவராக இருந்தாலும் சட்டத்தை மீறினால் சட்டம் செயற்படுத்தப்படும். நாங்கள் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளோம்.
ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்றம் எங்களிடம் உள்ளது. இங்கே எடுக்கப்படும் தீர்மானங்களை செயற்படுத்த உள்ளூராட்சி சபைகளும் அவசியமாகும். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் பிரதேச ரீதியில் நெறிப்படுத்த வேண்டும். இதற்காக தேசிய மக்கள் சக்திக்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை ஒப்படையுங்கள். நீங்கள் பிடித்த கைகளை மேலும் பலப்படுத்திக்கொள்வோம். நாங்கள் உங்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *