உலகம்

அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் சரியும் அபாயம்

அமெரிக்காவின் வரிகள் நடவடிக்கை காரணமாக, வர்த்தக முறைகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க நீண்டகால மாற்றங்களுடன், உலகளாவிய வர்த்தகம் மூன்று சதவீதம் சரியக்கூடும் என்று சர்வதேச வர்த்தக மையத்தின் செயல் இயக்குனரான பமீலா கோக் ஹேமில்டன் கூறினார்.

முன்னதாக இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரஸ்பர வரி விதித்து உள்ளார். இது சர்வதேச அளவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பல நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன.இதைத்தொடர்ந்து சீனாவை தவிர பிற முக்கியமான நாடுகளுக்கு எதிரான வரியை 90 நாட்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்தார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீது 125 சதவீத வரியை அறிவித்தது. டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக போருக்கு வித்திட்டுள்ளது.இந்நிலையில் அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக மையத்தின் செயல் இயக்குனரான பமீலா கோக் ஹேமில்டன் ஜெனீவா, \”அமெரிக்காவின் பரஸ்பர வரி நடவடிக்கையால் வர்த்தக முறைகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க நீண்டகால மாற்றங்களுடன், உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சரியக்கூடும். இதைப்போல நாடுகளின் ஏற்றுமதியும் இடம் மாறும்.

எடுத்துக்காட்டாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மெக்சிகோ ஏற்றுமதியை சொல்லலாம். அந்த நாட்டின் ஏற்றுமதியானது அமெரிக்கா, சீனா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற சந்தைகளில் இருந்து கனடா மற்றும் பிரேசிலுக்கும், குறைந்த அளவில் இந்தியாவுக்கும் மாறுகிறது.இதைப்போல வியட்நாம் ஏற்றுமதிகள் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா சந்தைகள், ஐரோப்பிய யூனியன், கொரியா உள்ளிட்டவற்றுக்கு மாறுகிறது.

ஜவுளித்துறை வளரும் நாடுகளுக்கான பொருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் உலகின் 2-வது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கும் வங்காளதேசம் 37 சதவீத வரியை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு 2029-க்குள் 3.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.28 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும். பரஸ்பர வரி விதிப்பால் சீனா, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். அதைப்போல அமெரிக்காவும் பாதிப்பை எதிர்கொள்ளும்\” என்று அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *