பெருமையுடன் வாழ்த்துகிறேன்…. ஏலையா க.முருகதாசன்

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் அக்கினிக்குஞ்சு ஊடக இணையத்தளம் தனது பதினைந்தாவது ஆண்டினை நிறை செய்து தொடர்ந்தும் தனது பயணத்தில் எத்தளர்வுமில்லாது, ஊடக இலக்கியப் பணியை தொடர்வது கண்டு மகிழ்வுடன் பாராட்டி மகிழ்கிறேன்.
இவ்விணையத்தளத்தின் ஆசிரியர் திரு.சதா பாஸ்கர் அவர்கள் தாயகத்திலேயே இலக்கிய அவாக் கொண்டவராகவும், நாடகத்துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துத் தன்னை ஒரு சிறந்த கலைஞனாகவும் இனங்காட்டியவர் என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் அவருடைய இலக்கிய அவாவும் ஆர்வமும் பொதுவாழ்வின் நாட்டமும் சற்றும் குறையாமலிருக்கின்றது என்பதற்கு அவர் பங்காற்றிய தமிழர் நலன்சார் கழகங்கங்கள், சங்கங்கள் அடையாளமாக இருக்கின்றன.
இலக்கிய அவா என்பதன் சாட்சியாக அக்கினிக்குஞ்சு என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை நடத்தியதும், அதன் பரிணாமத்தின் நீட்சியாக அதே பெயரில் இணையத்தள ஊடகத்தை நடத்தி வருவதும் அவரின் கலை இலக்கிய ஆளுமைகளுக்குச் சான்றாகும்.
தாயகத்தில் அச்சு ஊடகங்களாக மட்டுமே பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளிவந்த அந்தந்த சமகாலங்களலெல்லாம் அதன் வெளியீட்டாளர்கள் பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறார்கள் சந்தித்தும் கொண்டுமிருக்கிறார்கள்.
புலம்பெயர் தெசங்களில் இது இன்னும் கல்லிலே நார் உரிப்பது போன்ற மிகுந்த சிரமமாகும். வணிகத்துக்கு அப்பால் ஊடகங்களை நடத்த வேண்டும் என்ற விருப்புக்கு காரணம் ஒருவருக்கு ஏற்படும் ஆர்வம் மட்டும் காரணமல்ல. தான் சார்ந்த இனம், சமுதாயம் ஆகியவற்றின் மாந்தர் வாசிப்பாளர்களாக மாற வேண்டும். அவர்கள் நாளாந்த செய்திகளை கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை வாசிப்பவர்களாக, அவற்றின் மூலம் உலகை அறிபவர்களாக உயர வேண்டும் என்பதுடன் படைப்பாளிகளாக புதியவர்கள் உருவாக வேண்டும் என்ற நல்நோக்கமுமே அக்கினிக்குஞ்சு இணையத்தள ஆசரியர் அவர்களை தொடர்ந்தும் இப்பணியைச் செய்ய வைக்கின்றது.
இன்றைய கணணி யுகத்தில் இணையத்தள ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒரு செய்தித்தளமாக வளர்ச்சிபெற்று வருவதை காண முடிகின்றது.
இணையத்தளத்தை திறந்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வாசித்தறியும் பசிக்கு அறிதல் எனும் உணவளிக்கும் பாத்திரமாக அக்கினிக்குஞ்சு இணையத்தளம் தனது கடமையைச் சரிவரச் செய்து வருகின்றது.
ஒரு குடும்பஸ்தர் வேலைக்கு போய் வந்து கொண்டும் ஒரு இணையத்தளத்தை நடத்துவது என்பது மிகவும் சிரமமானது. நானும் ஜேர்மனியில் ஏலையா என்ற சஞ்சிகையை நடத்தியவன் என்பதனால் அதன் சிரமங்களை நன்கறிவேன். அதுவும் புலம்பெயர் நாடுகளில் இது மிகச் சிரமமானது.
தமிழர்களால் நடத்தப்படும் இணையத்தளங்கள் பலவற்றை நான் வாசித்து வருபவன். அவைகளில் ,மக்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக பொய்களையும், புழுகுதலையும் தலைப்புக்கும் உள்ளீட்டுக்கும் முரண்பாடு உள்ளைவையாக தம்மை அடையாளப்படுதத்தி வரும் இணையத்தளங்களில் அவ்வாறு எழுதாத விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு அறம் நோக்குக் கொண்ட இணையத்தளங்களில் அக்கினிக்குஞ்சு சிறந்த வகிபாகத்தை வகித்து வருவதை அவதானிக்க முடிகிறது. மகிழ்ச்சியாகவுமிருக்கின்றது.
செய்திகள், கதை ,கட்டுரை, கவிதை, நிகழ்ச்சி விபரங்கள், காணொளிகள் என இன்னும் பலவாக தனது இணையத்தள நிலத்தில் பிரசுரித்து வருவதுடன். செய்திகளைச் செய்திகளாக மட்டுமே பிரசுரிப்பதும் அச்செய்திகளுக்குள் ஆசிரியரோ, அவரது குழுவினரோ தமது கருத்துக்களைத் திணிப்பதும் இல்லை, பின்னூட்டங்களைச் சேர்ப்பதும் இல்லை, அவ்வாறு முயல்வது ஊடக அறம் சார்ந்ததே இல்லை.
இதுவே சிறந்த ஊடகத்தின் வரவிலக்கணமும் இலட்சணமுமாகும். பல இணையத்தளங்களை அன்றாடம் வாசிக்கும் வாசகர்கள் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் ஒவ்வொரு மதிப்பீட்டினைக் கொண்டிருப்பார்கள்.
இவ்விணையத்தளத்தில் இலங்கையைச் சார்ந்தவர்களோ புலம்பெயர் நாடுகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே தமது ஆக்கங்களை பதியவில்லை, தமிழகம் தொட்டு உலகளாவிய ரீதியாக தரமான எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் எழுதிவருவதுடன் எழுத ஆர்வப்படும் எழுத்தாளர்களையும் உருவாக்கி வருவது கண்கூடு. எதிலும் காத்திரமும் அழகியலும் வேண்டும். அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி இணையத்தள ஊடகமாக இருந்தாலும் சரி வடிவமைப்பு என்பது கண்ணுக்கு விருந்தாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும். ஏதோ பிரசுரித்தால் போதும் என்ற நிலையில் சாட்டுக்கு எழுத்துக்குவியல்களின் தளமாக இணையத்தளங்கள் இருப்பது அழகல்ல.
நோக்குதல் என்பதில் கண்களே முதலில் பார்க்கும் பொருட்களை, அதன் காத்திரத்தை, அது என்ன என்பதையும் அதன்மீதான விருப்பத்தை தக்க வைப்பதற்குமாக உற்றுதலைச் செய்கின்றன.
அக்கினிக்குஞ்சு இணையத்தளம், அதில் அதிக சிரத்தையும் கரிசணையும் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
இவ்விணையத்தளத்தின் ஆசிரியர் திரு.சதா பாஸ்கர் மட்டுமல்ல அவருடைய குடும்பத்தினரும் அவரோடிணைந்து ஒத்துழைப்பு வழங்கிவருவதனை இவ்விணையத்தளத்தின் வளர்ச்சியினூடாக உணர முடிகின்றது.
இலங்கையிலிருந்து ஆசிரியர் அவர்களுக்கு இப்பணியில் துணை நிற்பவர்களும் ஆசிரியரின் எண்ணங்களையும்,அவரின் சிந்தனைகளையும் உணர்ந்து புரிந்தவர்களாக இருப்பதை இவ்விணையத்தளத்திலிருந்தே புரிந்து கொள்ள முடிகின்றது.
இவ்விணையத்தளம் மிகுந்த பணச் செலவிலேயே நடத்தப்படுவதை உணர முடிகின்றது. ஒரு வளர்ச்சியடைந்த இனத்தில் அதுனுடைய சமூகத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பல்கிப் பெருகுவதைக் காண முடியும்.
தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பிச்சை புகினும் கற்கை நன்றே தாரக மந்திரத்தைக் கொண்டவர்களா கல்விக்கும் அறிவின் விருத்திக்காகம் ஊடகங்கள் மீதும் அதீத அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
நிதித்துணை இல்லாமல் இப்பிரமாண்ட இணையத்தளத்தை நடத்த இயலாது. அவுஸ்திரேலியா
மண்ணில் தமிழுக்காக பல சங்கங்கள் இருப்பதை அறிய முடிகின்றது. இவ்விணையத்திற்கு இச்சங்கத்தினரும் ஆக்க பங்காளர்களாவும் ஒத்துழைப்பாளர்களாகவும் இருக்க வேண்டும் என வேண்டுகிறேன் .சிறுதுளி பெருவெள்ளம் போல அவை பெருகும் நிலை தோன்றும்.
2014 ஆம் ஆண்டு புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற எழுத்தாளர்களில் 26 எழுத்தாளர்களினால் ஒன்றிணைந்து ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினூடாக எழுதப்பட்ட விழுதல் என்பது எழுகையே என்ற நாவலை தொடர்ந்து ஒரு வருடமாகப் பிரசுரித்த காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட எமக்கும் ஆசிரியருக்குமான இலக்கியம் சார் நட்பாகவம், நட்பாகவும் வளர்நிலை கண்டு எனது ஆக்கங்களை இற்றைநாள்வரை பிரசுரித்து எனக்கு ஊக்கத்தை அளித்து வரும் அக்கினிக்குஞ்சு இணையத்தள ஆசிரியர் திரு.சதா பாஸ்கர் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவிப்பதுடன், இவ்விணையத்தள ஆசிரியர், ஆக்கதார்கள், வாசகர்கள், விளம்பரதாரர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டினையும் வாழ்த்தினையும் பணிவன்புடன் தெரிவிக்கிறேன்.
தொடர்ந்தும் இணைந்திருப்போம் ,தொடர்வோம்,வாழ்க அனைவரும்.
ஏலையா க.முருகதாசன்
ஜேர்மனி 08.04.25
![]()