கொழும்பு நகர சபைக்கும் பல உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை !

கொழும்பு மாநகர சபை உட்பட சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாத காரணத்தால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை அடிப்படையாகக் கொண்டே குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாநகர சபை மற்றும் குளியாப்பிட்டிய, ஹரிஸ்பத்துவ, உடபலாத, பன்வில, பாததும்பர ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ரிட் மனுக்கள் நேற்று திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவவர் நீதிரியரசர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பீ.பிரானந்து ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்ட போது, அவற்றை மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், அதுவரையில் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவை விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 5ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறு, மனுதாரர்களின் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மே 7ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
இதேவேளை பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றுப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான ரிட் மனுக்கள் பலவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆராயப்ப்பட்டுள்ளது.
![]()