இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; யார் அந்தச் சூத்திரதாரி?; பொலிஸாருக்கு கடும் அழுத்தம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்று சம்பந்தமில்லாத எவரையாவது அரசாங்கம் காட்டலாம் என்றும், பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கி அதிக அழுத்தம் கொடுப்பதால் இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்றும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய அலுவலகத்தில்  நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி சுபநேரம் பார்த்து வேலை செய்பவர் போன்றே தெரிகின்றார். குற்றச்செயலொன்றுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை வெளியிடுவதற்கான் காலம் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டியவர்களை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறுவதானது, சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளை வெளியிடாவிட்டால் வீதிக்கு இறங்குவோம் என்று பேராயர் கூறியிருந்த நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இப்போது பொலிஸாருக்கு பெரும் அழுத்தம் உருவாகியுள்ளது.

கதையொன்று உள்ளது. இங்கிலாந்தில் பயிற்சியொன்றின் போது உலக நாடுகளில் உள்ள பொலிஸாருக்கு நடவடிக்கையொன்றுக்காக நரியொன்றை பிடித்துவருமாறு கூறினார்களாம். இதன்படி மற்றைய நாடுகளின் பொலிஸ் அதிகாரிகள் நரியை தேடி காடுகளில் சோதனையிட்ட போது, இலங்கை பொலிஸார் முயலொன்றை பிடித்து அதனை நரியென்று ஏற்றுக்கொள்ளும் வரையில் அடித்து அதனை நரியென காட்டினார்களாம்.

அதேபோன்று ஷேயா என்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்தில் கொண்டயா என்ற ஒருவரை கைது செய்தனர். அவர் அந்தக் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இறுதியில் டீஎன்ஏ பரிசோதனையில் அவர் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று உறுதியானது. இவ்வேளையில் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொண்டீர்கள் என்று நீதிமன்றத்தல் கேட்ட போது சீஐடியில் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இரவு முழுவதும், அடித்தமையினால் அடிகளை தாங்க முடியாமல் அதனை ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

அவசியமற்ற அழுத்தத்தை பொலிஸார் மீது சுமத்தும் போது இவ்வாறுதான் நடக்கும். அப்படியாயின் பேராயரால் ஜனாதிபதிக்கு பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதற்கு மூன்றுவார கால அவகாசம் வழங்கியுள்ளார். இதனால் பிரதான சூத்திரதாரியாக நாட்டுக்கு முன்வைக்கப்படும் நபர்கள் முன்னர் குறிப்பிட்ட முயல் போன்றோ அல்லது கொண்டயா என்ற நபர் போன்றோ இருக்கலாம். இவ்வாறாக முன்வைக்கப்படுபவர்கள் உண்மையான சூத்திரதாரிகளா இல்லையா? என்பதனை கண்டறிய பல வருடங்கள் ஆகலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *